RATING : 2.5/5
ஏழு கடல்கள் தாண்டிப்போனாலும் இளவட்டத்தோட மனசுக்குள்ள காதல் கிச்சுகிச்சு மூட்டாம இருக்குமா? அப்படி மனசு உருக உருக காதல் வழிய வழிய ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘பறந்து செல்ல வா’.
வேலை கிடைத்த கையோடு முதன் சீனிலேயே சிங்கப்பூருக்கு ப்ளைட் ஏறுகிறார் ஹீரோ லுத்புதீன். வேலை கிடைத்த சந்தோஷத்தை விட ஒரு காதலி கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் தான் அவரை ரொம்பவே வாட்டுகிறது.
அதோட எபெக்ட்
கண்ணில் படுகிற பெண்களை எல்லாம் காதலிக்கிறேன் என்று துரத்துகிறார்.
எல்லாமே பெயிலியர் ஆக, நண்பன் சதீஷுன் ரூம்மெட்டாக இருக்கிற இரண்டு நமீதா சைஸ் பெண்களும் செம கலாய் கலாய்க்கிறார்கள்.
அவர்களுக்காகவே ஒரு பெண்ணை காதலித்துக் காட்ட வேண்டும் என்கிற வெறியில் சக ஆபீஸ் நண்பரான ஆர்.ஜே.பாலாஜியிடம் ஐடியா கேட்கிறார்.
ரெடியாகிறது ஒரு போலியான பேஸ்புக் ஐடி. கூகுளில் தென்படுகிற அழகான பெண் ஒருவரை தோழியாக்கி, காதலியாக்கிக் கொள்கிறார்.
இதற்கிடையே அதே சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷை ஊரில் லுத்புதீனுக்கு நிச்சயம் செய்கிறார்கள்.
இருவரும் திருமணத்துக்கு தயாராகிற நேரத்தில் அந்த போலி ஃபேஸ்புக் ஐடி காதலியான நரேல் கேங் நேரில் எண்ட்ரி!
அப்புறம் என்ன? இருவரில் யாரை லுத்புதீன் கரம் பிடித்தார் என்பதே கிளைமாக்ஸ்.
ஹீரோவுக்கான எந்த அடையாளமும் லுத்புதீனிடம் இல்லை. ஆனால் நடிப்பில் ”நாசர் புள்ளையாச்சேப்பா” என்கிற பெயரை மறக்காமல் காப்பாற்றியிருக்கிறார்.
முகத்தில் எப்போதுமே மெல்லிசாக ஒட்டியிருக்கிற துறுதுறுப்பும், கார் சேசிங்கில் அசால்ட் செய்கிற போதும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
”ஏங்க தெரியாம உங்க போட்டோவை வெச்சு விளையாடிட்டேங்க… என்னை விட்ருங்க” என்று நரேல் கேங்கிடம் கெஞ்சுகிற போது காமெடியிலும் களை கட்ட வைக்கிறார்.
சிங்கப்பூர் பேக்ட்ராப்பில் மாடர்ன் கேர்ள் ஆக வந்தாலும் காஸ்ட்யூம்களை குறைப்பதில் கஞ்சத்தனம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனாலும் அந்தக் குறை தெரியாமல் பாடல்காட்சிகளில் லுத்புதீனுடன் நெருக்கம் காட்டி சமாளிக்கிறார்.
ஐஸ்வர்யா வைத்த குறையை முழுமையாகப் போக்குகிறார் சீங்கப்பூரைச் சேர்ந்த சீனக்குயிலான அறிமுக நாயகி நரேல் கேங்.
அப்பப்பா… அவருடைய கண்களில் தான் என்ன ஒரு காந்த இழுவை. பார்க்கிற அத்தனை பேரையும் சுண்டியிழுக்கும் அந்தப் பார்வையில் காதலும் சேர்ந்து வெளிப்படும்போது சொக்கித்தான் போகிறார்கள் ரசிகர்கள்.
தனியாக வளர்ந்த பெண் பாசத்துக்காக ஏங்குவதை மொழி தாண்டி நடிப்பிலும் மிக இயல்பாக வெளிப்படுத்திய நரேல் கேங் தமிழ்சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு எமி ஜாக்சன்!
ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், கருணாகரன் என மூன்று காமெடியன்களை படத்தில் இறக்கி விட்டிருந்தாலும் நிஜமாலுமே சிரிக்க வைப்பது ஆர்.ஜே.பாலாஜி தான். சதீஷூம், கருணாவும் வழக்கம் போல சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.
பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் குத்தாட்டம் போட்ட ஆனந்தியும், ஒரு சிங்கப்பூர் ஆண்ட்டியும் காட்டுகிற அரைகுறை ஆடைக்குறைப்பில் மனசு லேசாகும்! அதிலும் ”நம்ம ஊரு சிங்காரி” பாடலில் ஆனந்தி இடுப்பை ஆட்டுகிற அழகோ அழகு!
‘உலகம் முழுவதும் அடிவாங்குறதே தமிழனுக்கு பொழப்பா போச்சு…’ என்பதற்கு, ‘ஆமாம், அதை வேடிக்கை பார்க்குறதும் தமிழன்தான்’ என்பது போன்ற அர்த்தமுள்ள வசனங்களால் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார் பேயோன்.
படத்தில் கை வலிக்க பாராட்டித் தீர வேண்டியது சந்தோஷ் விஜய்குமார் – பிரபாகரன் இருவரின் ஒளிப்பதிவு. சிங்கப்பூரின் மொத்த அழகையும் துளி கூட மிச்சம் வைக்காமல் கொட்டியிருக்கிறார்கள். பறந்து பறந்து அவர்கள் எடுத்திருக்கிற ஹெலிகாப்டர் ஷாட்டுகள் அத்தனையும் சிங்கப்பூரின் அழகை தனித்துவமாக காட்டுகிறது.
ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசையும், ”காற்றில் ஏறி மிதக்குதே”, ”மண் மிது இன்பம்”, ”நதியில் விழுந்த பூவின்” என அத்தனை பாடல்களும் ரகளையான ரசனை!
இரண்டு நாயகிகளிடம் மாட்டிக்கொள்கிற ஹீரோக்கள் கதையை ஆயிரம் இந்த தமிழ்சினிமா பார்த்து விட்டது.
என்றாலும் அவர்களின் நிஜ வாழ்க்கையை சீரியலாக்க ஒரு கும்பல் துரத்துவதும், ஒரு பெண்ணின் தனிமை என்பது மொழி கடந்தும் பாசத்துக்காக ஏங்குவது தான் என்கிற நிஜத்தையும் சிங்கப்பூர் பேக்ட்ராப்பில் படமாக்கி பெரிதாக குறை காண முடியாத படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.
பறந்து செல்ல வா – ஜாலியான டூர்!