RATING : 2.5/5
ஒரு பேய் படத்தில் இருக்கிற அத்தனை சமாச்சாரங்களோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கையே முழுமையான சந்தோஷம் என்கிற ஒன்லைன் மெசேஜை சொல்கிற படம் தான் இந்த ”சங்கிலி புங்கிலி கதவ தொற.”
வாடகை வீடுகளில் குடியிருக்கும் போது அம்மா படும் அவமானங்களை பார்க்க சகிக்காத ஜீவாவுக்கு சொந்த வீடு தான் கனவு.
சிறு வயதில் அம்மாவிடம் கை காட்டி ”இந்த வீட்டை சொந்தமாக வாங்கி அதோட பால்கனியில உன்னை நிக்க வெச்சு வேலைக்குப் போறப்ப டாட்டே காட்டுவேன்மா” என்று சபதம் போடுகிறார்.
அதற்காகவே ரியல் எஸ்டேட் புரோக்கராகி அம்மாவிடம் எந்த பங்களாவை சிறு வயதில் கை காட்டினாரோ? அதே பங்களா வீட்டுக்குள் பேய் இருப்பதாக புரளிகளை கிளப்பி விட்டு அதை குறைந்த விலையில் சொந்தமாக்குகிறார்.
மகிழ்ச்சியோடு அந்த பங்களாவுக்குள் குடி போனால் ‘இது என்னோட வீடு’ என்று எச்சரிக்கிறார் அந்த வீட்டில் ஆத்மாவாக வாழ்ந்து வரும் ராதாரவி. எதற்காக அவர் அப்படிச் சொல்கிறார்? அவருக்கும் அந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு ப்ளாஷ்பேக் காட்சிகளோடு முடிவது தான் கிளைமாக்ஸ்.
நடுத்தரக் குடும்பத்து இளைஞனாக வரும் ஜீவா அதே அக்மார்க் நடிப்பை வெளிக்காட்டுகிறார். படம் முழுக்க வந்தாலும் ஹீரோயிசத்துக்கான முக்கியத்துவம் அவரிடம் குறைவாகவே வெளிப்படுகிறது.
கால்ஷீட் கொடுத்ததற்காக வாங்கிய கரன்ஸிகளை எண்ணி கரண்ட் அக்கவுண்ட்டில் போடுகிற நேரத்தில், சில நிமிடங்களையாவது ஒதுக்கி இந்தக்கதை நமக்கு தோதாகுமா இல்லையா? என்று யோசித்திருக்கலாம் ஜீவா! இனிமேலாவது அதைச் செய்யுங்களேன்.
கூடவே வரும் சூரி கவுண்டமணி, வடிவேலு, செந்தில் என முன்னால் காமெடி சூப்பர் ஸ்டார்கள் எல்லாருடைய மேனரிசங்களையும் ஒவ்வொரு காட்சியில் காட்டி காமெடி செய்கிறேன், சிரியுங்கள் என்கிறார். சிரிப்பு தான் வரவே மாட்டேன் என்கிறது.
ஜீவா வாங்கிப் போடும் அதே வீட்டை புரோக்கர் மூலமாக வாங்கும் தம்பி ராமையாவின் மகள் தான் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. ஜீவாவுடன் வருகிற காதல் பார்த்தவுடன் பற்றிக்கொள்கிற அறுதப்பழசான எபிசோட். இருந்தாலும் இம்மியளவும் குறையாத அழகுக்காக ஸ்ரீதிவ்யாவை ரசிக்கலாம்.
தம்பி ராமையாவும், தேவதர்ஷினியும் அநியாயத்துக்கு டபுள் மீனிங் வசனங்களை பேசுகிறார்கள். இலை மறை காய் மாதிரி இல்லாமல் மிக எளிமையாகப் புரிந்து சிரிக்கிறது ரசிகர் கூட்டம். ( டைரக்டர் ராதாரவி வீட்டு வாரிசுங்க!)
படத்தில் பரவாயில்லப்பா என்று சொல்லி ஓரளவுக்கேனும் ரசிக்க வைப்பது ராதாரவியின் கேரக்டர் தான். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அவரை சொத்துக்காக மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து போட்டுத் தள்ள நினைக்கையில் மனுஷன் அப்படியே உடைந்து விடுகிறார். அந்தக் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியெடுக்கிறார். (மேக்கப்பை கொறைச்சிருக்கலாம்)
‘அண்ணாமலை’ படத்தில் ராதாரவி பேசும் வசனத்தை குறிப்பிட்டு ‘உனக்குத்தான் தெரியுமே… கூட்டிக் கழிச்சுப் பாரு’ என்று ராதாரவியிடமே ஜீவா சொல்லும் காட்சி நல்ல ரசனை.
விஷால் சந்திரசேகர் இசையில் பின்னணி இசை கூட பயமுறுத்தலில் பாஸ்மார்க் வாங்கி விடுகிறது. ஆனால் பாடல்கள் தான் மனசுக்குள் நிற்பேனா என்கிறது.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் ஸ்ரீதிவ்யாவை க்ளோசப் ஷாட்டிலும், அந்த பேய் பங்களாவை லாங் ஷாட்டிலும் இமைக்காமல் ரசிக்கலாம்.
”கூட்டுக்குடும்பமே சந்தோஷமான வாழ்க்கை” என்று ஒரு பேய் வந்து மனிதர்களுக்கு அட்வைஸ் செய்கிறது, டஜன் கணக்கில் வருகின்ற பேய்ப்படங்களில் இந்த ஒரு லைனை யோசித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஐக்.
மனசு விட்டுச் சிரிக்கும்படியான காட்சிகள் இல்லை, ட்ரெய்லரைப் பார்த்த போது வந்த பயம் முழுப்படத்தையும் பார்த்து விட்டு வருகிற போது ஒரு சீனில் கூட வரவில்லை. இந்த இரண்டுமே பிரதானமாக இருக்கும் பேய்ப்படங்களில் இந்தப்பேய்ப்படம் எந்த மாதிரியான டிசைன்? டைரக்டருக்கே வெளிச்சம்!
வாரத்துக்கு ஒரு பேய்ப்படமாவது ரிலீசாகித் தொலைந்தால் பத்தோடு பதினொன்றாகத்தானே எண்ணித் தொலைக்க வேண்டியிருக்கிறது.