RATING : 2.8/5
‘என்றென்றும் புன்னகை’ தான் ஜீவாவுக்கு நிஜமான புன்னகையை கொடுத்த படம். அதன்பிறகு வந்த ‘யான்’, ‘போக்கிரி ராஜா’ இரண்டு படங்களும் பரிதாபத்துக்குரியவை. அப்படிப்பட்ட அபாய கட்டத்தில் இருக்கிற ஜீவாவுக்கு கை கொடுத்திருக்கிறதா இந்த ‘திருநாள்.’
வாருங்கள் பார்க்கலாம்…
கமகம காபிக்கு பேர் போன கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை கலங்க வைக்கும் ரெளடி சரத் லோகிதஷ்வா.
அவர் கையசைத்தால் போதும், யாராக இருந்தாலும் கட்டிக்கொண்டு வா என்றால் வெட்டிக்கொண்டு வந்து விடும் அடியாள் ஜீவா. அனாதையான தன்னை எடுத்து வளர்த்த விசுவாசத்தின் வெளிப்பாடு அது. அப்படிப்பட்ட வில்லனிடம் அமைதியே உருவான ஜோ மல்லூரி சாக்கு மண்டி தொழிலில் பார்ட்னராக இருக்கிறார். அவரது மகள் தான் பிரீ கேஜி டீச்சரான நாயகி நயன்தாரா.
அவருக்கு தன் கழுத்தில் பொறுக்கியான ஜீவா தாலி கட்டி கல்யாணம் செய்து கொள்வது போல கனவு வர, அது ஒரு நாள் நிஜமாகும் சூழலும் ஏற்படுகிறது.
இதனால் ஜீவாவுக்கு தனது விசுவாசத்துக்குரிய எஜமான் லோகிதஷ்வாவை பகைத்துக் கொள்ள நேரிடுகிறது.
இனி ரெளடி தொழிலே வேண்டாம் என்று நயன்தாராவுடன் திருந்தி வாழ ஆசைப்படும் ஜீவாவுக்கு எடுத்து வளர்த்த எசமானே கிளைமாக்ஸில் வில்லனாக வந்து நிற்கிறார். அதன் பிறகு ஜீவாவின் வாழ்க்கை என்னவானது என்பதே கிளைமாக்ஸ்.
நறுக்கி விடப்பட்ட மீசை, லைட்டான மேக்கப், அரக்கை சட்டை, கைலி என லுக்கில் ஒரு அக்மார்க் கிராமத்து ரௌடியாகவே அதகளம் பண்ணியிருக்கிறார் ஜீவா!
வாயில் ஒரே ஒரு ப்ளேடுத் துண்டை வைத்து மெண்ணு துப்பி மிரள வைப்பது தான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. அதற்காகவே அவருக்கு படத்தில் கேரக்டர் பெயர் ‘பிளேடு.’
ஆக்ஷனில் மட்டுமில்லாமல் நயன்தாராவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் கிளைமாக்ஸில் வில்லனின் காலைப் பிடித்து கெஞ்சுகிற செண்டிமெண்ட் காட்சிகளிலும் நடிப்பில் ஈர்க்கிறார்.
நாயகியாக வருகிறார் நயன்தாரா. தனி ஒருவனில் பார்த்த அழகுப் புயலா இது. கண்டிப்பாக அப்படி ஒரு சந்தேகம் வரும். மேக்கப் இல்லாதது பெருங்குறை என்றால் படம் முழுக்க பாவாடை தாவணியில் வரும் நயனோடு எப்போதுமே ஒட்டியிருக்கும் ஒருவித அழகு இதில் டோட்டலாக மிஸ் ஆகியிருக்கிறது.
பிரீகேஜ் ஸ்கூலுக்கு வரும் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்று முத்தம் கேட்கும் போது ஒரு குசும்புக்கார குழந்தை நயன்தாராவின் உதட்டிலேயே கிஸ் அடிப்பது மட்டும் ரசிகர்களுக்கு ஆறுதல்.
ஒரே ஒரு பார்வை போதும், இவர் தான் வில்லன் என்று சொல்லி விடலாம் வில்லனாக வரும் லோகிதஷ்வாவை, அப்படி ஒரு மிரட்டலான பார்வை. கோர்ட்டு வளாகத்தில் இருந்து கொண்டே உள்ளே இருக்கும் நீதிபதிக்கு பயத்தை காட்டுபவர் வைப்பாட்டி விஷயத்தில் மட்டும் செம சறுக்கல். அதிலும் மீனாட்சி மாதிரியான பிகரை கூடவே வைத்துக் கொண்டு அதற்கு கொஞ்சமும் ஈடாகாத கருணாஸின் மனைவியைத் தேடிப்போவதெல்லாம் டூமச்.
மாரிமுத்து, ‘நீயா நானா’ கோபி, ஜெயபாலன் ஆகியோர் சில காட்சிகள் மட்டும் வருகிறார்கள். அதைத்தாண்டி குறிப்பிட்டுச் சொல்லும் படி அவர்கள் கேரக்டர்கள் இல்லை. முனீஸ்காந்த்தை காமெடி செய்ய விட்டிருக்கிறார்கள். சிரிப்புத்தான் வரமாட்டேன் என்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இதில் ஸ்ரீயாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார், பெயரில் மட்டுமில்லாமல் இசையிலும் கூட பெருத்த மாற்றம். பங்காளி, திட்டாதே, பழைய சோறு என மனசை லேசாக்குகிற சூப்பர் பீட்ஸ்.
பச்சைப்பசேலென்று பார்க்கிற வயல்வெளிகளையும், கிராமத்து தெருக்களில் அசலான அழகையும் அப்படியே கொண்டு வந்ததில் தனக்கான இருப்பை பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி.
வன்முறை இல்லாத நாள் தான் எல்லோருக்கும் திருநாள் என்பதைத்தான் சொல்ல வருகிறார் இயக்குநர் ராம் நாத். அதற்காக பலதடவை பார்த்து பார்த்து சலித்துப் போன பழைய கதைக்கு திரைக்கதை அமைத்திருப்பது தான் பெருத்த ஏமாற்றம்.
இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோ சோகப்பாட்டு பாடுவார். அதோடு அடிக்கடி வரும் பாடல்கள் காட்சிகளின் நகர்வுக்கு மிகப்பெரிய தடை.
படத்தில் அப்பட்டமாக தெரியும் லாஜிக் மீறல்களை கொஞ்சம் செப்பனிட்டிருந்தால் ஜீவாவுக்கு இந்தப்படம் உண்மையிலேயே ‘திருநாளாக’ அமைந்திருக்கும்.