உள்குத்து விமர்சனம்

RATING : 3/5

நட்சத்திரங்கள் – தினேஷ், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர்

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு – பி.கே.வர்மா

இயக்கம் – கார்த்திக் ராஜூ

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’

வகை – நாடகம், ஆக்‌ஷன்

கால அளவு – 2 மணி நேரம், 7 நிமிடங்கள்

‘திருடன் போலீஸ்’ வெற்றிப்படக் கூட்டணியான தினேஷ் – பால சரவணன், இயக்குனர் கார்த்திக் ராஜூ ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த ‘உள்குத்து.’

வீட்டை விட்டு வெளியேறி மீனவக் குப்பத்துக்கு வருகிறார் ஹீரோ தினேஷ். அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் அதே குப்பத்தில் தங்கை ஹீரோயின் நந்திதாவுடன் வசிக்கும் பால சரவணன். நந்திதாவை பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுகிறார் தினேஷ். பதிலுக்கு நந்திதாவும் தான்.

ஒருநாள் ரெளடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி என அந்த ஏரியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் வில்லன் சரத் லோகிதஸ்வாவின் மகனான திலீப் சுப்பராயன் பால சரவணனை அடித்து விடுகிறார். அதைப் பார்த்ததும் திலீப் சுப்பராயனை நடுரோட்டில் அடித்து துவைக்கிறார் தினேஷ்.

தகவலைக் கேள்விப்படும் சரத் லோகிதஸ்வா தன் மகனை அடித்த தினேஷை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால் தினேஷோ அங்கு நடக்கும் படகுப் போட்டியில் தனது வெற்றியை திலீப் சுப்பராயனுக்கு விட்டுக் கொடுத்து சரத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார்.

அதன்பிறகு சரத்தின் வில்லன் கோஷ்டியில் சேர்ந்து திலீப்பின் நெருங்கிய நண்பனாகவும் ஆகிறார். மற்றொரு முறை போலீஸ் அதிகாரியை கொலை செய்த வழக்கில் திலீப் சுப்பராயனை ஒரு பக்கம் சக போலீஸ் அதிகாரிகள் தேடி வர, இன்னொரு பக்கம் கூட்டாளிகளே கொலை செய்ய முயற்சிக்க, இரு கோஷ்டிகளிடமிருந்தும் திலீபை காப்பாற்ற நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து படகில் அழைத்துக் கொண்டு நடுக்கடலுக்கு செல்கிறார்.

அங்கு எதிர்பாராத விதமாக திலீப் சுப்பராயனை தினேஷே கொலை செய்து விடுகிறார். அதைப் பார்த்ததும் பால சரவணனுக்கு ஷாக். நட்பாகப் பழகி, நெருங்கிய நண்பனான பிறகு ஏன் திலீப் சுப்பராயனை தினேஷ் கொலை செய்தார்? கூடவே சென்ற பால சரவணனுக்கு எழும் அந்தக் கேள்வி தான் படம் பார்க்கும் நமக்கும் எழுகிறது? அதன் பின்னணியை சொல்வதே படத்தின் மீதிக்கதை.

விஜய், அஜித், விக்ரம் போன்ற முன்னணி மாஸ் ஹீரோக்களுக்கேற்ற ‘பர…பர…’ ஆக்‌ஷன் கதை. ஆனால் அந்த லெவலுக்கான ஓவர் பில்டப் இல்லாமல் தன் லெவலுக்கு என்ன மாஸ் காட்ட வேண்டுமோ? அதை பெர்பெக்ட்டாக வெளிப்படுத்தியிருக்கிறார் தினேஷ். பல காட்சிகளில் அமைதியாகவே வருகிறவர் அந்த மாதிரியான தருணங்களில் அவரது முந்தைய படங்களில் வெளிப்படுத்திய உடல் மொழிகளை ஞாபகப்படுத்துகிறார்.

அதிகம் மேக்கப் இல்லாமல், சிம்பிளான உடைகளுடன் அசல் குப்பத்துப் பெண்ணாகவே வருகிறார் ஹீரோயின் நந்திதா. அவர் குப்பத்துப் பெண் என்பதற்காகவே மீன் குழம்பு வைத்து ஹீரோவுக்கு கொடுப்பது போல ஒரு காட்சியை வைத்திருக்கிறார் இயக்குனர். அதைத்தாண்டி தினேஷுடன் லிமிட்டடான ரொமான்ஸ், பாடல் காட்சிகளில் அதிகம் நெருங்காமல் டீசண்ட்டான இடைவெளி என ரொம்பவே ‘அடக்கி வாசிப்பு’ தான்.

தினேஷின் நண்பனாக படம் முழுக்க வருகிற பால சரவணன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ‘சுறா சங்கர்னா சும்மாவா…’ என கையை முறுக்கிக் கொண்டு பேசுவதும், அதே டயலாக்கை தானும் அவ்வப்போது பேசி பால சரவணனை தினேஷ் நடுங்க வைப்பதும் செம டைமிங். அதற்காக படம் முழுக்க அதே டயலாக்கை அடிக்கடி சொல்வது எரிச்சல் ப்ரோ!

காமெடிக்காக இறக்கி விடப்பட்ட குப்பத்து தலைவர் செஃப் தாமு. தேவையில்லாத இடைச்செறுகல். மனுஷன் நடிக்க ரொம்பவே கஷ்டப்படுவது திரையில் அப்பட்டமாகத் தெரிகிறது.

வழக்கமான வில்லன் கேரக்டரில் வருகிறார் சரத் லோகிதஸ்வா. அவரை விட அவரது மகனாக வரும் திலீப் சுப்பராயன், பிளாஷ்பேக்கில் சில காட்சிகளே வந்தாலும் ஸ்ரீமன், ஜான் விஜய், சாயா சிங் ஆகியோரின் நடிப்பு அபாரம்.

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும் கூடுதல் பலம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூட கவனம் செலுத்தியிருக்கலாம். திலீப் சுப்பராயனின் ஆக்‌ஷன் காட்சிகளோடு கபடி விளையாட்டு செம..! செம..!!

அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி என ரவுண்ட்டு கட்டியடிக்கும் ரெளடிகளுக்கு இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது? சமூகத்தில் உண்மையான மதிப்பும், மரியாதையும் கிடைக்காத அப்படிப்பட்ட ஒரு தொழில் தேவைதானா? என்கிற சமூகக் கருத்தை சொல்கிறது படம்.

வழக்கமாக நாம் பார்த்து ரசித்த பழிவாங்கல் டைப் கதை தான் என்றாலும், அதை மீனவக் குப்பத்துப் பின்னணியில் படு லோக்கலான ஆக்‌ஷன் ட்ரீட் ஆக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜூ.

உள்குத்து – செம கெத்து

Bala SaravananCaarthick RajuDineshJustin PrabhakaranMovie ReviewNandita SwethaUlkuthuUlkuthu Movie ReviewUlkuthu Review
Comments (0)
Add Comment