RATING : 2/5
வெளிநாடுகளிலிருந்து படமெடுக்க வருபவர்கள் பெரும்பாலும் இரண்டு விஷயங்களைத் தான் படத்தின் பிரதான கதையாக வைத்திருப்பார்கள்.
ஒன்று சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதம், மற்றொன்று குழந்தை கடத்தல்.
இந்த இரண்டு விஷயங்களையும் கொண்ட ஒரே படமாக வந்திருக்கும் படம் தான் இந்த வல்ல தேசம்.
இந்தியாவிலிருந்து கணவர் மற்றும் தன் ஒரே பெண் குழந்தையுடன் லண்டனில் குடியேறுகிறார் அனுஹாசன்.
அங்கு சென்ற சில நாட்களிலேயே தீவிரவாதிகள், அனுஹாசனின் கணவரை ரகசிய உளவாளி எனக் கருதி அவரை கொலை செய்து விடுகிறார்கள்.
அத்தோடு விடாமல் அவரது பெண் குழந்தையையும் கடத்திக் கொண்டு போகிறார்கள்.
ஆனால் உளவாளியாக வந்திருப்பது அனுஹாசன் தான் அவரது கணவர் அல்ல என்கிற உண்மை தீவிரவாதிகளுக்கு தெரிய வர, இந்தியாவை அழிக்கத் துடிக்கும் அந்த சர்வதேச தீவிரவாதிகளிடம் தனி மனுஷியாக நின்று போராடி மகளையும், நாட்டையும் எப்படி மீட்கிறார் என்பதைச் சொல்லும் படமே இந்த ‘வல்ல தேசம்.’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அனுஹாசன். விஜயகாந்த் மாதிரியான ஏற்று நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் விஜய சாந்தி போல துணிச்சல் காட்டியிருக்கிறார்.
ஆனாலும் சுவாரஷ்யமில்லாத காட்சிகளால் அவரது நடிப்பை ரசிக்கத் தான் முடியவில்லை.
ராணுவ உயர் அதிகாரியாக வரும் நாசர், கணவர் அமித், வில்லன் டேவிட், வில்லனின் அடியாளாக ஆடுகளம் ஜெயபாலன் என படத்தில் வரும் மற்ற நட்சத்திரங்களும் தங்கள் கேரக்டரை முழுமையாகச் செய்து கவனம் ஈர்க்கிறார்கள்.
வழக்கமாக ராணுவப் பின்னணி கதை என்றால் அதில் ஆண் ராணுவ வீரர்களின் துணிச்சலான செயல்களைத் தான் படங்களில் பதிவு செய்வார்கள். முதல் முறையாக இந்தியாவைப் பாதுகாக்கப் போராடும் ராணுவப் படையில் துணிச்சலான பெண் போராளிகளும் உள்ளனர் என்பதை பதிவு செய்ய நினைத்ததற்காகவே இயக்குநர் நந்தாவை பாராட்டலாம்.
ஆனால், கதை யோசிப்பில் காட்டிய அக்கறையை கொஞ்சம் சுவாரஷ்யமான திரைக்கதை அமைப்பதிலும் காட்டியிருந்தால்
படம் விறுவிறுப்பான ஆங்கிலப்படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கும்.
முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்ட படமென்பதால் ஓசியில் லண்டனை சுற்றிப்பார்த்து வந்த சந்தோஷத்தைத் தருகிறது ஒளிப்பதிவு.
முத்துக்குமார சாமியின் இசை மோசமில்லை.
டேட்டா பேஸ் மேனேஜ்மண்ட், சாட்டிலைட் கம்யூனிகேஷன் என பல நவீன டெக்னாலஜிக்கு படத்தை பொருத்தியிருக்கிற இயக்குநர் நந்தா தேச நலன், நாட்டுப்பற்று ஆகிய விஷயங்களை வலியுறுத்தியதற்காகவே இந்த வல்ல தேசத்தை நல்ல தேசமாக ரசிக்கலாம்.