வில்லாதி வில்லன் வீரப்பன் – விமர்சனம்

RATING : 1.5/5

ள்ளதை உள்ளபடி படமெடுக்க துணிச்சல் வேண்டும். அதற்கு திராணி இல்லையென்றால் ராம் கோபால் வர்மா மாதிரியான ‘அதி மேதாவி’ இயக்குநர்கள் எல்லாம் சகலத்தையும் பொத்திக் கொண்டு கமர்ஷியல் ஏரியாவுக்குள்ளேயே புழங்க பழகிக் கொள்ள வேண்டும்!

அதை விட்டு விட்டு நானும் உண்மைச் சம்பவத்தை படமாக எடுக்கிறேன் பேர்வழி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக அடிப்படை உண்மைகளை மறைத்து விட்டு யாரோ சிலரை திருப்திபடுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ள கற்பனை வளத்தை தங்கள் இஷ்டத்துக்கு திரைக்கதையாக்கி படமாகி எடுத்தால் அதை விட தான் சார்ந்திருக்கும் திரைத்துறைக்கும், தன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் செய்யும் பச்சைத் துரோகம்  வேறேதுவும் இல்லை.

அப்படி ஒரு பச்சைத் துரோகத்தை தான் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தில் செய்திருக்கிறார் ‘ட்விட்டர்’ சர்ச்சை புகழ் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் ‘தனிக்காட்டு ராஜா’வாக உலா வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கியிருக்கிறார். ஆனால் கால்வாசி கூட படத்தில் உண்மை இல்லை.

வீரப்பன் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தினான். யானை தந்தங்களை கடத்தினான். இரக்கமில்லாமல் போலீஸ் அதிகாரிகளையும், வி.ஐ.பிகளையும் வெட்டி கொலை செய்தான். அவ்வளவு ஏன் அதிரடிப்படையிடமிருந்து தப்பிக்க தான் பெற்ற பச்சைக் குழந்தையையே பாறையில் மோதி சாகடித்தான் என்கிற அதிர்ச்சி தகவலையும் சொன்ன ராம் கோபால் வர்மா மொத்த படத்தையும் பொய்யும், புரட்டுமாக கலந்து எடுத்திருக்கிறார்.

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு உலகம் அறிந்தது. அது தெரிந்திருந்தும் எப்படி இப்படி உண்மைக்கு மாறான ஒரு கதையை படமாக்க ராம் கோபால் வர்மாவுக்கு மனசாட்சி இடம் கொடுத்தது என்று தெரியவில்லை.

படம் ஆரம்பித்ததில் தொடங்கும் ராம் கோபால் வர்மாவின் பொய் புரட்டுகள் கிளைமாக்ஸ் வரை தொடர்வது தான் வேடிக்கை. தனது கடைசி காலகட்டத்தில் கண் பார்வை குறைந்து அவனுக்கு சிகிச்சை அளிக்க கூட்டிச் சென்று கோழைத்தனமாக அதிரடிப்படை சுட்டுக் கொன்றது தான் வரலாறு சொல்லும் நிஜம்.

ஆனால் இதில் வீரப்பன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டார் என்றும், அவரை சந்திக்கப் போகிற வழியில் தான் போலீசார் அவரையும், அவருடைய கூட்டாளிகளையும் சுட்டுக் கொன்றார்கள் என்று புதுசாக படம் பார்க்கும் ரசிகர்களில் காதுகளில் கிலோ கணக்கில் பூவை சுற்றுகிறார்.

சரி அதோடு விட்டாரா?

ஒரு பெண் என்றும் பாராமல், இன்றைக்கும் இந்த சமூகத்தின் மத்தியில் தான் வாழ்ந்து வருகிறார் என்கிற எண்ணம் சிறிதளவும் இல்லாமல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை எவ்வளவு கேவலப்படுத்தி காட்சிகளை வைக்க முடியுமோ? அவ்வளவு கேவலப்படுத்தியிருக்கிறார். இதில் முத்துலட்சுமியாக வருகிறார் உஷா ஜாதவ். அவரை விசாரிக்கக் கூப்பிடுகிறேன் என்று போலீஸ் அதிகாரிகள் இடுப்பில் கை வைப்பதும், பின்பக்கம் சேலை இழுத்து மூடப்படாமல் இருப்பதை திரையில் அப்பட்டமாகக் காட்டுவதும் ராம் கோபால் வர்மாவின் வக்கிரத்தனத்துக்கு சாம்பிள்.

ஹெலிகேமை வைத்து காட்டுப்பகுதியை ஒளிப்பதிவு செய்து பிரம்மாண்டமாக காட்டியிருப்பது, ஒரு த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசையைக் கொடுத்தது என டெக்னிக்கலாக படம் தேறியிருக்கிறது.

வீரப்பனாக நடித்திருக்கும் சந்தீப் பரத்வாஜ் மீசையை முறுக்குவதிலும், எதிராளியை பார்க்கும் பார்வையிலும் நிஜ வீரப்பனின் மேனரிசங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் சில இடங்களில் அவர் செய்யும் சீரியஸ் மேனரிசங்கள் சிரிப்பு போலீஸ் மாதிரி ஆகி விடுகிறது.

இறந்து போகும் ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியாக வருகிறார் லிசாரே… வீரப்பனை பிடிக்க அவரது உதவியையும் நாடும் மூத்த போலீஸ் அதிகாரியான சச்சின் ஜெ.ஜோஷி ஒரு கட்டத்தில் லிசாராவையே தன் வலையில் வீழ்த்து முற்படுவது கேவலம்.

அதிரடிப்படை வீரராக வரும் சச்சின் ஜெ. ஜோஷி ரொமான்ஸ் படங்களில் நடிக்கும் ஹீரோ போல இருக்கிறார். இருந்தாலும் காக்கி உடையில் பல இடங்களில் அவருடைய கம்பீரம் ஓ.கே ரகம்.

”நம்மகிட்ட நெறைய படைகள் இருக்கு. அதுக்காக ஒரு எறும்பை பிடிக்க அந்தப் படையை இறக்குறதுல என்ன சார் அர்த்தம் இருக்கு?”

”ஒரு ராட்சஷனை அழிக்க அவனை விட பெரிய ராட்சஷனாக உருவெடுக்கணும்…”

”இதுவரைக்கும் வீரப்பன் மாதிரி ஒரு ஆள் இருந்ததும் கிடையாது. இருக்கப் போவதும் கிடையாது!”

இப்படி அர்த்தப் புஷ்டியாக வசனம் எழுதியவர்களுக்கு ரஜினிகாந்த்தும், காஞ்சி சாமியாரும் தமிழ்நாட்டில் மினிஸ்டர்கள் என்று எந்த வெண்ணை சொன்னது? ”ரஜினி, காஞ்சி சாமி… இப்படி எல்லா பெரிய மினிஸ்டர்களையும் கடத்தணும்” என்று வசனம் வைத்திருக்கிறார்கள்.

குழம்பில் கரைக்கிற ‘புளி’ என்கிற வார்த்தை வந்தாலே பதறியடித்துக் கொண்டு அதை நீக்கவோ அல்லது மியூட் பண்ணவோ சொல்லும் சென்சார் அதிகாரிகள் இதில் ‘விடுதலைப்புலி’களின் தலைவர் ‘பிரபாகரன்’ தான் இந்தியாவின் பிரதமர் ராஜூவ் காந்தியை கொன்றார் என்கிற வசனத்தை மியூட் கூட செய்யாமல் அனுமதித்திருப்பது சென்சார் அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிக்க வைப்பதாக இருக்கிறது.

இப்படி வீரப்பன் செய்த அட்டூழியங்களை மட்டுமே காட்சிப்படுத்திய ராம் கோபால் வர்மா வீரப்பனை பிடிக்கப் போகிறேன் பேர்வழி கர்நாடக – தமிழக மாநில அரசுகளின் கூட்டு அதிரடிப்படை வீரர்கள் அங்குள்ள கிராமத்து மக்களுக்கு செய்த அட்டூழியங்களை முற்றிலுமாக பதிவு செய்வதை தவிர்த்திருக்கிறார்.

ஒருவேளை நடந்த உண்மைகளை அப்படியே பதிவு செய்தால் அது வீரப்பன் பக்கம் நியாயம் இருப்பதாக தெரியலாம். அப்படி இருந்தால் செத்துப்போன வீரப்பனுக்கு ஆதரவாக படமெடுத்து என்ன பிரயோசனம் என்று யோசித்திருக்கலாம்.

ஆகவே அதையெல்லாம் விட்டு விட்டு மத்திய அரசுக்கும், இரு மாநில அரசுகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ஜால்ரா தட்டும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார் வர்மா. அப்போது தானே வரிச்சலுகை, விருதுகள், பண முடிப்புகள் கிடைக்கும்(?)

சினிமாவை நிஜமாகவே நேசிக்கும் கலைஞனுக்கு குறைந்த பட்சம் நேர்மை இருக்க வேண்டும். அப்படி இல்லாத யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட அரைகுறை கதையை படமாக்கி நடந்த உண்மைகளை முழுமையாக மறைப்பது நானும் திரைக்கலைஞன் என்று சொல்லிக்கொள்ளும் ராம் கோபால் வர்மாக்களுக்கு அழகல்ல.ஆனால் அதைத்தான் இந்தப் படத்தில் செவ்வனே செய்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

வில்லாதி வில்லன் வீரப்பன் – முதுகெலும்பு இல்லாதவன்!

Lisa RayR.D TelangRam Gopal VarmaSachiin J JoshiSandeep BhardwajUsha JadhavVillathi Villain VeerappanVillathi Villain Veerappan Movie ReviewVillathi Villain Veerappan Reviewஉஷா ஜாதவ்சந்தீப் பரத்வாஜ்சினிமா விமர்சனம்ராம் கோபால் வர்மாலிசா ரேவிமர்சனம்வில்லாதி வில்லன் வீரப்பன் - விமர்சனம்
Comments (0)
Add Comment