2027-ஐ குறி வைக்கும் ஜிவி பிரகாஷ்!
2026-ஆம் ஆண்டில் ஜிவி பிரகாஷுக்கு எதிர்பார்த்த மாதிரி சில படங்கள் அமையவில்லை. அதனால் 2027-ஐ அவர் சீரியசாக அணுகுகிறார்
லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், அந்நிறுவனத்தின் முந்தைய வெற்றிப் படங்களான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகியவற்றைத் தொடர்ந்து உருவாகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் கவனம் ஈர்த்த ஹரிஹரன் ராம் இப்படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிப்பதுடன், இப்படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். இதில் அவர் கிரிக்கெட் வீரராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் தீவிரப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
‘ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மாளவிகா மனோஜ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ், சன் டிவி தொகுப்பாளர் ராகேஷ் மற்றும் காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.