அஞ்சல – விமர்சனம்
RATING : 2.7/5
ஊருக்குள் தனி அடையாளமாக இருக்கும் ஒரு டீக்கடை தோன்றி, வளர்ந்த வரலாற்றையும், அதைச்சுற்றி நடக்கும் சம்பவங்களையும் சுவாரஷ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் இந்த ‘அஞ்சல’.
தாத்தா பசுபதி நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளைக்காரன் காலத்தில் நிழலுக்கு ஒதுங்குவதற்காக ஆரம்பித்த தண்ணீர் பந்தல் அப்படியே தேநீர் கடையாக மாறுகிறது.
அந்த பழமையான டீக்கடையை தனது காலத்திலும் தொடர்ந்து நடத்தி வருகிறார் பேரன் பசுபதி.
சொந்த பந்தம் இல்லாத அவருக்கு அந்த டீக்கடையும், அந்த டீக்கடை இருக்கும் சோழவந்தான் ஊர் மக்களும் தான் வீடு, வாசல், சொந்தபந்தம், நட்பு எல்லாமே…
அதே ஊரில் சொந்தமாக டூ-வீலர் ஒர்க்ஷாப் வைப்பதற்காக வங்கிக்கடனுக்கு காத்திருக்கும் இளைஞர் ஹீரோ விமல். அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் டைம்பாஸ் ஸ்பாட்டே அந்த டீக்கடை தான்.
கிட்டத்தட்ட ஊரின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்ட அந்த டீக்கடையை சாலை விரிவாக்கத்துக்காக இடிக்க திட்டமிடுகிறது நெடுஞ்சாலைத்துறை.
அரசின் இந்த முடிவால் அதிர்ந்து போகும் பசுபதி ஊர் மக்களின் துணையுடன் அந்த டீக்கடையை காப்பாற்ற போராடுகிறார்.
அதே ஊரில் கள்ளச்சாராயம் காய்ச்சுகிற சுப்பு பஞ்சுவாலும், கடைக்கு அடிக்கடி விமலின் நண்பனாக வரும் ஒரு மெடிக்கல் ரெப் செய்யும் கள்ள நோட்டு புழக்கத்தாலும் கடையைக் காப்பாற்றுவதில் கூடுதல் சிக்கல்கள் வருகிறது.
இந்த அக்கப்போர்களுக்கிடையே விமல் – நந்திதா காதல், தாத்தா பசுபதியின் அழகான ப்ளாஸ்பேக் காட்சிகளோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் தங்கம் சரவணன்.
பசுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றாலே கண்டிப்பாக அந்தப் படத்தின் ஹீரோ கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் போலிருக்கிறது! படத்தின் ஹீரோ விமல் என்றால் நடிப்பிலும், கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளிலும் பசுபதியே அதிகம் ஸ்கோர் செய்கிறார்.
தனது வழக்கமான நடிப்புடன் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்டைப் போல படம் முழுக்க வந்து போகிறார் விமல். ( இனிமேலாவது கதை செலக்ட் பண்றதுல கொஞ்சம் உஷாரா இருங்க ப்ரோ..)
நாயகியாக வரும் நந்திதா விமலை சுற்றி சுற்றி வந்து மாண்டேஜில் டூயட் பாடுவதோடு சரி, வேறு எந்த முக்கியத்துவமும் அவருக்கு இல்லை.
தாத்தா பசுபதி எப்படி அந்த டீக்கடையை உருவாக்கினார் என்பதை அழகான ப்ளாஸ்பேக் காட்சிகள் மூலம் சொல்வதில் ரொம்பவே கவர்கிறார் இயக்குநர்.
படத்தில் தவிர்க்க முடியாத, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கேரக்டர் ‘அஞ்சல’ டீக்கடை. இன்றைக்கும் ஊர்ப்பக்கம் போனால் பல ஆண்டுகளின் சுவையான நினைவுகளைத் தாங்கிய அஞ்சல போன்ற டீக்கடைகளை பார்க்கலாம்!
காமெடிக்கு இமான் அண்ணாச்சியும், ஆடுகளம் முருகதாஸும் இருக்கிறார்கள். ஆனால் காமெடி தான் இல்லை.
சில காட்சிகள் வந்தாலும் பொருத்தமான கேரக்டரில் நடித்திருக்கிறார் ரித்விகா.
ரவி கண்ணனின் ஒளிப்பதிவில் ப்ளாஷ்பேக் காட்சிகள் ரம்மியம், கோபி சுந்தரின் இசையில் பின்னணி இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் ‘கண் ஜாடை காட்டி’ பாடல் மட்டும் மெலோடியில் கவர்கிறது.
ஆரம்பத்திலிருந்தே பெரிய வில்லனைப் போல சுப்பு பஞ்சுவை காட்டி விட்டு கிளைமாக்ஸில் மகள் செண்டிமெண்ட்டில் சட்டென்று மனசு மாறுகிற போது சல்லித்தனமாகி விடுகிறது வில்லத்தனம்.
முதல் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் பிரவீன் கே.எல்.
பல ஆண்டுகள் பசுமையான நினைவுகளை சுமந்து நிற்கும் டீக்கடை. அதைச்சுற்றி நடக்கும் சுவாரஷ்யமான சம்பவங்கள் என படத்தை நகர்த்த நினைத்த இயக்குநர் அதற்கான காட்சியமைப்புகளில் கூடுதல் விறுவிறுப்பை கொண்டு வருவதில் ரொம்பவே தடுமாறியிருப்பது திரைக்கதையில் அப்பட்டமாக தெரிகிறது.
காதல், காமெடி, ஹீரோவுக்கான முக்கியத்துவம் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த டீக்கடையில் தேனீர் நிஜமாகவே தித்திப்பாக இருந்திருக்கும்.
அஞ்சல – டிக்காஷன் பத்தல…