பிறந்த நாளில் ‘பாக்ஸர்’ ஆன அருண் விஜய்
வித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதுப்படம் பாக்ஸர்.
குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
படத்தை பற்றி அருண் விஜய்யிடம் கேட்டபோது, “இந்த படத்தை ஜனவரி 2019 வாக்கில் தான் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.
எனக்கு விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன். இந்த ஸ்கிரிப்டில் எமோஷன் மற்றும் இன்ஸ்பிரேஷன் விஷயங்கள் நிறைய உள்ளன. அது என்னை கவர்ந்தது. வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த விளையாட்டு திரைப்படங்களில் போராடும் நாயகன், இறுதியில் கதாநாயகனாக உயர்ந்து நிற்பான். இந்த படத்தில், ஹீரோ ஆரம்பத்திலேயே மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவர் தனது குறைகளை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது தான் கதை.
டிசம்பர் மாதம் முதல் மலேசியாவிலும் வியட்நாமிலும் குத்துச்சண்டை பயிற்சி துவங்க இருக்கிறது. இது ஃப்ரீஸ்டைல் குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எனக்கு பயிற்சியாளராக பணிபுரிகிறார்.
இப்படத்தை இயக்குனர் பாலாவின் முன்னாள் உதவியாளர் விவேக் இயக்குகிறார். நடிகர்கள் மற்றும் மற்ற படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லண்டனை சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அருண் விஜய் தற்போது நவீன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம்.