தயாரிப்பாளர் ஆனது ஏன்? : அசர வைத்த அட்லியின் பதில்

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். அந்த வரிக்கு பொருத்தமான இயக்குநர் அட்லி தான். ‘ராஜா ராணி’, ‘தெறி’ என இரண்டு பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த அட்லி அடுத்து மீண்டும் விஜய்யுடன் அவரது 61-வது படத்தில் இணைந்திருக்கிறார். 30 வயதுக்குள் இயக்குநரானதோடு மட்டுமில்லாமல் இப்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஒருபுறம் இயக்குநர் வேலை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, இன்னொரு புறம் படத்தயாரிப்பிலும் இறங்கி முதல் பட வேலையை முழுமையாக முடித்தும் விட்டார்.
”ஏ ஃபார் ஆப்பிள்” என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய வர் அதில் முதல் தயாரிப்பாக ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ”சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்தை தயாரித்திருக்கிறார். கமல்ஹாசனின் உதவியாளரும், எம்.ஆர்.ராதாவின் குடும்ப வாரிசுமான ஐக் தான் இப்படத்தின் இயக்குநர்.
இயக்குநர் வேலை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளர் ஆனது ஏன்? என்று கேள்வி கேட்காமலேயே அதற்கான காரணத்தைச் சொல்லி அசர வைத்தார் அட்லி…
”சினிமாவுக்குள் வந்து 6 வருடங்கள் ஆகி விட்டது. உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் சாரி மாதிரி நான் வளர்ந்த சினிமாவில் நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ‘ஏ ஃபார் ஆப்பிள்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
அதென்ன ‘ஏ ஃபார் ஆப்பிள்’ என்று நீங்கள் கேட்கலாம். முதல் முதலில் நாம் படிக்கக் கற்றுக் கொள்ளும் போது ‘ஏ ஃபார் ஆப்பிள்’ என்று தான் நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள். அதனாலேயே அந்தப் பெயரை எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்தேன்.
முதல் படமான ”சங்கிலி புங்கிலி கதவத் தொற” படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக் கை அறிமுகப்படுத்துகிறேன். ஐக் ரொம்ப திறமைசாலி. எனக்கு நிஜத்தில் பேய் என்றாலே ரொம்ப பயம், ஆனால் பேய் படம் பார்ப்பதென்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் ஒரு பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன்.
என்றவர் தொடர்ந்து என் நண்பன், என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடக்கும். நான் இயக்கும் தளபதி 61 நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அது சம்பந்தமான தகவல்களையும் ஜூன் மாதன் உங்களிடம் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன் என்றார் உஷாராக..!
வாழ்த்துகள் ப்ரோ!