இந்திய சினிமாவிற்கே புதிய கதை’அய்யய்யோ’!
‘அய்யய்யோ’ என பெயர் வைத்த தைரியத்திற்கு ஒரு சபாஷ்.நரமாமிசம் சாப்பிடும் மனிதர்களை பற்றிய புதுமையான கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு சபாஷ்.ஒரு மனநல காப்பகம். அங்கே சிகிச்சை பெரும் மனநோயாளிகள். அவர்களை சுற்றி நடக்கும் கதை. இப்படிப்பட்ட கதைகள் ஹாலிவுட் சினிமாவில் நிறைய நாம் பார்த்திருக்கிறோம். உதாரணத்திற்கு ‘ஒன் ஹூ ப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்’ ‘ஷட்டர் ஐலன்ட்’ ‘சைலன்ஸ் ஆப் தி லேம்ப்ஸ்’ ‘சக்கர்பஞ்ச்’ போன்றவற்றை சொல்லலாம்.
இது போன்ற கதைகள் தமிழில் மிக குறைவாகவே வந்துள்ளன. உதாரணத்திற்கு பாக்கியராஜின் ‘ஆராரோ ஆரிராரோ’ பிரபு நடித்த ‘மனசுக்குள் மத்தாப்பு’ போன்றவற்றை சொல்லலாம். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு ‘ சைக்காலஜிக்கல் திரில்லர் ‘ திரைப்படம் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
மனநல பாதிப்பின் காரணமாக, ஒரு மனநல காப்பகத்திற்கு சிகிச்சை பெற மனோ என்பவர் வருகிறார். அங்கே, சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதித்தவர்களில் ஒருவர் ஏற்கனவே தேர்தலில் நின்று தோல்வியுற்றதால் மனநலம் பாதித்தவர். பத்திரிக்கையில் தேர்தல் வருவதை அறிந்து, காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்கிறார். அவர் தன்னுடனே காப்பகத்தில் இருக்கும் மற்ற நோயாளிகளையும் உடன் அழைத்து செல்கிறார். அவர்களுக்கு தப்பிக்க மனோ உதவி செய்கிறான்.
மனோ உதவி செய்வதன் உள்நோக்கம் நம்மை திகைக்க வைப்பதாக உள்ளது. அது தமிழ் சினிமாவிற்கு, ஏன் இந்திய சினிமாவிற்கே மிகவும் புதியதான ஒரு கதை களத்தை நமக்கு காட்டுகிறது. இரண்டாம் பாதியில் திரைப்படம் ரத்தமும், கொலையுமாக நகர்வதை இந்தக் களம் உறுதி செய்கிறது. ஆனாலும் சிவகணேசன், பாக்யராஜ், ஹரிக்குமார் இணைந்து இயக்கயிருக்கும் சாமர்த்தியமான க்ளைமாக்ஸ் டுவிஸ்ட் இந்தத் திரைப்படத்தை நகைச்சுவையோடு முடிக்கிறது. மிஸ்டரி திரில்லர் வகை மற்றும் புதிய கதைக்களம் கொண்ட சினிமாவை விரும்புவோர் பார்க்க வேண்டிய வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படம் இந்த ‘அய்யய்யோ’