ரிலீஸ் சிக்கலில் ‘பாகுபலி 2’ : அனுஷ்காவுக்கு ராஜமெளலி எச்சரிக்கை
‘பாகுபலி 2′ எப்போது ரிலீசாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு தான் அந்தப் படக்குழு சார்பில் சந்தோஷ செய்தியை அறிவித்தார்கள்.
ஆமாம் அடுத்த ஆண்டு 2017 ஏப்ரல் 28 ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அப்படத்தின் ஹிந்தி ரிலீஸ் உரிமையை வாங்கியிருக்கும் கரண் ஜோகர் வெளியிட்டார்.
முதல் பாகத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டவர்கள் அதே கேரக்டரில் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
குறிப்பாக இந்த இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவின் கேரக்டர் எப்படியிருக்கும் என்பது தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தனது உடல் எடையைக் கூட்டி நடித்தார் அனுஷ்கா. அப்போது ‘பாகுபலி 2’ படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருந்ததால் அது ஆரம்பிப்பதற்குள் உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்தார்.
எவ்வளவோ முயன்றும் ராஜமெளலி எதிர்பார்த்த அளவுக்கு அனுஷ்காவின் உடல் எடை குறையவில்லை. ஓரளவுக்கு குறைத்து விட்டு ராஜமெளலியின் முன்னால் நின்ற அனுஷ்காவின் லுக் அவருக்கு திருப்தியாக இல்லை.
ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டதால் விரைவில் படப்பிடிப்பை முடித்து தொழில்நுட்ப வேலைகளை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற ராஜமெளலி அனுஷ்காவுக்கு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.
ஒருவேளை பாகுபலி 2 ரிலீஸ் தள்ளிப்போனால் அதற்கு அனுஷ்கா தான் காரணகர்த்தாவாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.