மகனின் முதல் பட டைரக்டர் பாலா தான்! : விக்ரமின் மனசை மாற்றிய செண்டிமெண்ட்!
விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையைக் கொடுத்த படம் பாலா இயக்கிய ”சேது.”
அதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த ஹிட் படங்கள் தொடந்து அமைய, தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் ஆகி விட்டார். இந்த பெயரும், புகழுக்கும் சேது படத்தின் மூலம் பிள்ளையார் சுழி போட்டதாலோ என்னவோ அந்த செண்டிமெண்ட்டில் தற்போது தன் மகன் துருவ் விக்ரமையும் பாலாவிடம் ஒப்படைத்திருக்கிறார் விக்ரம்.
சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் தான் தனது மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதோடு, படத்தை இயக்கும் பொறுப்பை பாலாவிடம் கொடுத்திருக்கிறார் விக்ரம்.
முன்னதாக தன் மகன் துருவை அறிமுகப்படுத்த மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன் போன்ற காஸ்ட்லியான பெரிய இயக்குநர் கிடைத்தால் தேவலாம் என்று காத்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு கடைசியாக பாலா மட்டுமே கிடைத்திருக்கிறார்.
’சேது’ படத்துக்குப் பிறகு எடுக்கிற படங்களெல்லாம் மறை கழண்டு போனவர் போலவே எடுத்துத் தள்ளி அப்பாவி ரசிகனையும் அது போலவே ஆக்கிக் கொண்டிருக்கும் பாலா விக்ரமின் மகனை படப்பிடிப்பில் என்ன பாடுபடுத்துவாரோ என்பதை நினைக்கும் போதும், படம் ரிலீசான பிறகு அதைப்பார்க்கப் போகும் ரசிகர்கள் என்ன பாடு படப்போகிறார்களோ என்பதை நினைக்கும் போதும் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது என்று கன்னத்தில் கையை வைக்கிறது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்!