ஆர்யா – ராணா – பாபி சிம்ஹா இணைந்து கலக்கும் ‘பெங்களூர் நாட்கள்’
மலையாளத்தில் வரலாறு காணாத வசூலை குவித்து கேரளாவிற்கு வெளியேயும் பெரும் வெற்றி பெற்ற ”பெங்களூர் டேய்ஸ்” (Bangalore Days) திரைப்படத்தை தற்போது தமிழில் ”பெங்களூர் நாட்கள்” என்ற பெயரில் பிவிபி சினிமா தயாரித்திருக்கிறது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த தமிழ் இயக்குநர் ”பொம்மரில்லு” பாஸ்கர் இயக்கிய இத்திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ இன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்து லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் ஜொலிக்கும் மல்டி ஸ்டார் படமாக உருவாகி சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது விருந்து படைக்க காத்திருக்கிறது. இதில் கனவு நாயகன் ஆர்யா, ‘பாகுபலி’யில் பட்டைய கிளப்பிய ராணா, ‘ஜிகர்தாண்டா’வில் வர்ணஜாலம் காட்டிய பாபி சிம்ஹா எல்லோருக்கும் பிடித்த ஸ்ரீ திவ்யா, சமந்தா, பார்வதி, ராய் லட்சுமி, மற்றும் பிரகாஷ்ராஜ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் சவாலான பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மூன்று கசின்கள் தங்களுக்குள் அன்பையும் நட்பையும் கொண்டாட்டங்களையும் எப்படி எற்படுத்தி கொண்டார்கள் என்பதையும் அவர்களுக்கு வரும் வாழ்க்கை மாற்றங்களை எப்படி எதிர் கொண்டார்கள் என்பதையும் பெங்களூர் நகர பின்னணியில் மிக ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள்
பிப்ரவரியில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தை பிவிபி சினிமா பிரமாண்டமாய் தாயாரித்திருக்கிறது. மலையாளத்தில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் கோபி சுந்தர் புதிய பரிமாணத்தில் இசையை தந்திருக்கிறார். கதிரின் கலை வண்ணத்தில் கே.வி.குகனின் அட்டகாச ஒளிப்பதிவில் ”பொம்மரில்லு” பாஸ்கர் கதாபாத்திரங்களின் நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக இயக்கியிருக்கிறார்.
வழக்கமாக நண்பர்களின் வாழ்க்கையையும் நட்பையும் பற்றி மட்டுமே பார்த்த தமிழ் சினிமாவில் மூன்று கசின்களின் கதையை படமாக பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பார்க்கும் படமாகவும் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் தங்களுடைய வாழ்க்கையோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் படமாகவும் அமைந்திருப்பது இந்த படத்தின் பலம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஒட்டி பயணிக்கிற ”பெங்களூர் நாட்கள்” மொத்தத்தில் ஒரு குடும்ப விருந்தாக அமையுமாம்!