கெட்ட அனுபவங்கள் தான் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்- அட்லீ
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அட்லீ தயாரித்த பத்தா படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப்படம் சென்றவாரம் வெளியாகி இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்றுப் படக்குழு அந்த வெற்றியைக் கொண்டாடியது. வெற்றிவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது,
“எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த நேர்மை, நம்பிக்கை திமிர் என்றால் இருக்கட்டும்.
பால் கெட்டுப் போனால், தயிராகும்போது அது மதிப்பு மிக்கதாக மாறுகிறது. தயிர் கெட்டுப் போனால், நெய்யாகும்போது அது மேலும் மதிப்பு மிக்கதாக மாறுகிறது. இப்படித்தான் வாழ்க்கையிலும் சில கெட்ட அனுபவங்களால் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். கடவுள் வழி தவறவிட்டார் என்றால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பத்தாவின் அனுபவம்தான் இந்தப் படம்.
நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். அப்படி அதற்கு திமிர் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் சின்ன வயதில் விஜய் சாரை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். ஷாருக்கானை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். அப்படித்தான் எனது ஒவ்வொரு கட்டமும் இருந்தது. இன்று பாலிவுட் வரை சென்று படம் இயக்கியிருக்கிறேன்.
நான் கறுப்பாக இருக்கிறேன், மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதைப் பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க் கொண்டே இருப்பேன்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நான் சொன்ன ஒரு சொல்லிற்காக வந்து இணைந்து கொண்ட தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி.
சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி அண்ணன். அவர் நல்ல மனிதர், நல்ல நடிகர் என்பதைவிட, முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ரஜினி சார், ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.
இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும். அவரை நான் மேலும் மேலே கொண்டு செல்வேன். கமல் சார், விஜய் சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு இருந்தால் ‘மருதநாயகம்’ படத்தினை மீண்டும் தொடங்கி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
சாய் அப்யங்கர் கடவுளின் குழந்தை. அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசலாம். ஆனால் நாங்கள் லண்டன் சென்றபோது, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய சுமார் 200 இசைக் கலைஞர்களையே இவரது இசைக் குறிப்புகளுக்கு வாசிக்கவைத்து, ஆச்சரியப்படுத்திக் கைதட்டல் வாங்கி வந்தவர். நான் இங்கு சொல்கிறேன், அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார். இப்படம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், மேலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் மக்களைத் தேடிச் செல்கிறேன். அது குறைவானதல்ல. மக்களை நோக்கிச் செல்வது உயர்வான விஷயம்” என்றார்.