சண்டக்கோழி 2 – விமர்சனம் #Sandakozhi2
RATING 3/5
நடித்தவர்கள் – விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் – என்.லிங்குசாமி
வகை – நாடகம், ஆக்ஷன்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
சில வருடங்களுக்கு முன்பு வெளியான வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் அணிவகுத்து வருவது சமீபகாலமாக கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் சென்ற 2005 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாகிய ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது இந்த ‘சண்டக்கோழி 2’.
7 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கோவில் திருவிழாவில் நடக்கும் கறி சோறு தகறாரில் வரலட்சுமியின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். இதனால் ஆத்திரமடையும் அவர் தன் கணவரை வெட்டியை குடும்பத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று சபதம் போட்டு ஒவ்வொருவராக வெட்டிச் சாய்க்க அந்தக் குடும்பத்தில் ஒருவரான ஜானி மட்டும் வரலட்சுமியின் பிடியிலிருந்து தப்பிக்கிறார்.
அதற்காக நேரம், காலம் பார்த்து காத்திருக்கும் வரலட்சுமி 7 வருடங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் கோவில் திருவிழாவில் எஞ்சியிருக்கும் ஜானியை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார். ஆனால் திருவிழாவில் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்று ஆசைப்படும் ராஜ்கிரண் ஜானியை பாதுகாக்க முடிவு செய்கிறார்.
எந்த சண்டை, சச்சரவும் ராஜ்கிரண் ஆசைப்பட்டபடி கோவில் திருவிழா நடந்ததா? வரலட்சுமி தன் சபதத்தை நிறைவேற்றினாரா? ஜானி வரலட்சுமியிடமிருந்து தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.
நானும் மதுரக்காரன் தாண்டா என்று படத்துக்குப் படம் வசனங்கள் பேசும் விஷால் இந்தப்படத்தில் அந்த மாதிரியான எந்த பில்டப்புக்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை. மாறாக அப்பா ராஜ்கிரண் சொல்பேச்சு கேட்டு நடக்கும் சமத்துப் புள்ளையாக நடித்திருக்கிறார். அதே சமயம் ஊரில் ஒரு பிரச்சனை என்று வரும்போது ஸ்டண்ட் காட்சிகளில் செம மாஸ் காட்டுகிறார்.
ஹீரோயினாக வரும் வரலட்சுமி தேனி மாவட்ட வட்டார வழக்கை முடிந்தவரை சரியாகப் பேசி நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் முதல் பாகமாக சண்டக்கோழியில் மீராஜாஸ்மினிடம் இருந்த துறுதுறுப்பு, கிண்டல், கேலி, கலாய் கீர்த்தியிடம் மிஸ்ஸிங். திருவிழாவில் அவர் போடும் ஒரு குத்தாட்டம் மட்டுமே ஆறுதல்.
கணவனை கொன்ற குடும்பத்தை பழி தீர்த்தே ஆக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் வரலட்சுமி தனது கோபத்தை திரையில் காட்டும் போது காஞ்சானா படத்தில் சரத்குமாரை பார்த்தது போல் இருக்கிறது. யப்பா என்னா வெறி?
படத்தில் நாம் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியவர் ஊர் பெரியவராக வரும் ராஜ்கிரண். மொத்த கதையையும் ஒற்றை மனிதனாக தன் தோளில் தூக்கிச் சுமக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு ராஜ்கிரணின் நடிப்பு தான் பக்க பலம்.
‘மெட்ராஸ்’ பட ஜானிக்கு இந்தப் படத்தில் ஹீரோ விஷாலுடன் படம் முழுக்க பயணிக்கும் கேரக்டர். ஹீரோயினை விட இவர் தான் அதிக நேரம் ஹீரோவுடன் வருகிறார். வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
கஞ்சா கருப்பு, சண்முகராஜன், தென்னவன் என முதல் பாகத்தில் முகம் காட்டியவர்கள் இந்தப் படத்திலும் தலை காட்டியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் விஷாலின் மாமன் மகள்களாக வந்த மோனிகாவும், இன்னொரு பெண் கேரக்டரும் இதில் மிஸ்ஸிங். காமெடி குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக தந்திருக்கிறார் முனீஸ்காந்த்.
யுவன் சங்கர் ராஜா இசையில் தாவணி போட்ட தீபாவளி மாதிரியான மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள் இல்லை. பின்னணி இசையில் அதிர வைக்கிறார். கோவில் திருவிழா காட்சிகளில் நிஜமாகவே பிரம்மிக்க வைக்கிறது கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப்படத்தை எடுத்திருக்கும் லிங்குசாமி அதற்கும் இதற்குமான கதைத் தொடர்ச்சியை புத்திசாலித்தனமாக சங்கிலி போட்டு இணைத்திருக்கிறார்.
முழுப்படமும் திருவிழாவைச் சுற்றியே நகர்கிறது என்றாலும் படம் பார்ப்பவர்களுக்கு அது எரிச்சல் தராத வண்ணம் கமர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறார்.
‘ஆஹா…’ என்று வரும்போது முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு கொஞ்சம் குறைவு தான்.