இறங்கி வந்த ஷங்கர் – கைமாறும் ‘இந்தியன் 2’
ஷங்கர் – கமல் கூட்டணியில் 1996 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘இந்தியன்’.
சுமார் 22 வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ படத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் ஷங்கர். கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க முன் வந்தது.
இதற்காக படத்துக்கு பூஜையெல்லாம் போடப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வந்தது. இடையில் மேக்கப் ஒவ்வாமை, கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பிஸியாக இருப்பது ஆகிய காரணங்களினால் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது.
மேலும் எப்போதுமே பட்ஜெட் கொடுக்காமல் படமெடுத்துப் பழகிய ஷங்கரிடம் திடீரென்று லைகா நிறுவனம் சரியான பட்ஜெட்டை கேட்டு ஷங்கர் அதைத் தர மறுத்து விட்டார். இதனால் அப்செட் ஆன லைகா நிறுவனம் இந்தியன் 2-வை கைவிடும் முடிவுக்கு வந்தது.
லைகாவின் இந்த முடிவை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஷங்கர் கொஞ்சம் இறங்கி வந்து படத்திற்கான சரியான பட்ஜெட்டை லைகாவிடம் கொடுத்தார். அப்படியும் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் லைகா கமலின் மார்க்கெட் கலவரமாகிக் கிடப்பதைப் பார்த்து இந்தியன் 2 படத்திலிருந்து பின்வாங்க முடிவு செய்திருக்கிறது.
இதனால் ஏற்கனவே தன்னை வைத்து படம் தயாரிக்க பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் படத்தை கைமாற்றும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது ரிலையன்ஸ் ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முன் வந்தாலும், எப்போதுமே ஆளுங்கட்சிக்கு சோப்பு தடவியே தொழிலை வளர்த்துக் கொண்டிருக்கும் அந்நிறுவனம் முழுக்கதையையும் படித்து பார்த்த பின்பு ஆளுங்கட்சியை விமர்சிக்கும் காட்சிகள் இல்லாததை உறுதிபடுத்தியபிறகு தான் படத்தை தயாரிப்பது பற்றி யோசிப்போம் என்று கூறியிருக்கிறதாம். ரிலையன்ஸின் க்ரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.