பிளாக் படத்தின் வெற்றிச்சந்திப்பில் நெகிழ்ந்த ஜீவா!

Get real time updates directly on you device, subscribe now.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே செய்து வரும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வித்தியாசமான கதை பற்றி வாய்மொழியாக பரவிய செய்திகளால் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறும் மேஜிக்கையும் பிளாக் படம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக பிளாக் படக்குழுவினர் இதன் சக்சஸ் மீட்டை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடத்தினார்கள்.

நடிகர் ஜீவா பேசும்போது,

“ஹைதராபாத்தில் ஒரு படப்படிப்பில் இருந்தபோது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார் ஒரு கதையை என்னிடம் சொல்ல விரும்புகிறார் என தகவல் வந்தது. அந்த இயக்குநர் அங்கே நேரிலேயே வந்து கதை சொன்னார். அதில் எனக்கு சிறப்பு தோற்றம் தான். அந்த படம் தான் இறுகப்பற்று. அப்போது தயாரிப்பாளரிடம் கடந்த ஐந்து வருடங்களாக எல்லா படத்திலும் இதேபோல சிறப்பு தோற்றத்தில் தான் நடித்து வருகிறேன்.. வேறு சிறப்பான கதையை சொல்லுங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு பி.ஆர்.ஓ. ஜான்சன் சார் மூலமாக தான் இந்த பிளாக் படத்தின் கதையை கேட்டேன். அவர்களது பேச்சிலிருந்து அவர்கள் வித்தியாசமான கதைகளை படமாக்க வேண்டும், மக்களுக்கு பிடிக்கும் விதமாக கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பதை உணர முடிந்தது.

Related Posts
1 of 5

இந்த படத்தில் ஒப்பந்தமான பிறகு ஒரு முறை விமானத்தில் நடிகர் கார்த்தி சாருடன் பயணித்தேன் இந்த தகவலை அவரிடம் சொன்னபோது பொட்டென்ஷியல் நிறுவனம் சாதாரணமாக ஒரு படத்தை வெளியிட்டு விட மாட்டார்கள் அனைத்து தரப்பிலும் நன்கு விவாதித்து, பார்த்து பார்த்து செதுக்கி தான் ரிலீஸ் செய்வார்கள் என்று சொன்னார். ஆனால் ரிலீஸ் சமயத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பிற்கு முன்பும் படப்பிடிப்பு சமயத்திலும் கூட செதுக்கும் வேலை நடந்து கொண்டு தான் இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை நடிகர்களின் புகழை விட ஸ்கிரிப்ட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதையே எங்களது சூப்பர்குட் நிறுவனத்தில் சொல்லியிருந்தால் என் தந்தை என்னடா ரீல்களை மாற்றி மாற்றி போட்ட மாதிரி இருக்கிறதே என்று கமெண்ட் பண்ணி இருப்பார். சில பேர் கதை சொல்லும்போது லவ் ஸ்டோரியாக இருக்கும் படமாக எடுக்கும் போது சைக்கோ லவ் ஸ்டோரியா மாறிவிடும். மேலும் எங்களைப் போன்ற நடிகர்களுக்கு பாடல் வேணும் சண்டைக்காட்சி வேணும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்தும் ஒரு அழுத்தம் இருக்கும். ராம், கற்றது தமிழ் போன்ற படங்கள் ஒரு நடிகராக என்னை மாற்றினாலும் திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது. அதனால்தான் கொஞ்சம் ரூட்டை மாற்றி ஈ, கோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அது போன்ற படங்களை எடுக்க துவங்கி விட்டார்கள். அந்த வகையில் இந்த பிளாக் படத்தை மக்களை யோசிக்க வைக்கும் ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று தான் அவர்கள் நினைத்தார்கள். ஒரு சிக்கலான கதையை எவ்வளவு எளிதாக பண்ண முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறோம். அதற்கு இயக்குநர் பாலாவுக்கு நன்றி. அவரது குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதை பார்த்திருந்தால் ஒருவேளை இந்த படத்தை இன்னும் முன்கூட்டியே முடித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

அறிவாளியாக இருக்கிறேன், அதனால் படம் பார்ப்பவர்களின் அறிவாளியாக மாற்றுகிறேன் என படம் எடுக்க முடியாது. மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறவன் இப்படி ஒரு படம் பார்க்கும்போது என்னை எதுக்குப்பா இவ்வளவு யோசிக்க வைக்கிறீங்க என்று கேட்பார். ஆனால் அவகளும் இன்று மாறி விட்டார்கள். அவர்கள் திரையரங்குகளில் சந்தோஷமாக பார்ப்பதற்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. இந்த படத்திற்கு இரண்டாவது பாகம் எப்போது எடுக்கிறீர்கள் என எல்லோரும், ஏன் எங்கள் வீட்டிலும் கூட கேட்கிறார்கள். இந்த கம்பெனி என்னிடம் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.

இதற்குமுன் வணிக ரீதியான படங்களில் தான் நடிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் எனக்கு சில சரிவுகள் ஏற்பட்டது. கோ போன்ற படத்திற்குப் பிறகு இப்படி ஒரு படத்தில் நடிக்க ரிஸ்க் எடுக்கிறேன் என்றால் அந்த சரிவு கூட ஒரு காரணமாக இருக்கலாம். எல்லா படமும் நன்றாக ஓட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் காலையில் கேமரா முன் நிற்கிறோம். படம் பார்த்தவர்கள் நீங்கள் நன்றாக நடித்து இருக்கிறீர்கள் என கூறினார்கள். நான் சாதாரணமாகத்தான் நடித்திருந்தேன். அதனால் இந்த பாராட்டுக்களுக்கு படக்குழுவினர் தான் காரணம்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கோஸ்டல் பாரடைஸில் தான் இந்த படப்பிடிப்பை நடத்தினோம். இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு வருடமாக அந்த பக்கம் போகவில்லை. ஏனென்றால் தினசரி ஒரு லூப்பில் மாட்டிக்கொண்ட மாதிரி இருந்தது. அதன் பிறகு என் நண்பர்கள் அந்தப்பகுதிக்கு கூப்பிட்ட போது கூட நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதே கோஸ்டல் பாரடைஸில் நமக்குள்ளாக ஒரு சக்சஸ் மீட் நடத்திக் கொள்ளலாம் என தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இது போன்ற சக்சஸ் மீட்டை பார்த்து எனக்கு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்படி சக்சஸ் மீட்டை கொண்டாடுவதற்காகவே இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும். அதிலும் பொட்டென்ன்ஷியல் நிறுவனத்துடன் இணைந்து இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினார்.