யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் பிரஷ்மீட்!
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன், இயக்குநர் சிம்பு தேவன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, நடிகர்கள் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மாஸ்டர் அக்ஷத் தாஸ் , நடிகைகள் மதுமிதா, கௌரி கிஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் யோகி பாபு பேசுகையில்,
“போட் திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக உருவாகி உள்ளதற்கு இயக்குநர் சிம்பு தேவன் தான் காரணம், அவருக்கு எனது நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கடின உழைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஆதரவை ‘போட்’ திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். மிக்க நன்றி,” என்று கூறினார்.