பொம்மை நாயகி- விமர்சனம்
அதிகாரம் அடங்க, அறிவாயுதம் ஏந்த வேண்டும் என்பதே பொம்மை நாயகி சொல்லும் நீதி.
தானுண்டு தன் டீக்கடை வேலையுண்டு என வாழும் யோகிபாபுவிற்கு ஒரு அன்பு மகள். அந்த மகளுக்கு சொந்த ஊரில் உள்ள சில பெரிய மனிதர்களால் ஒரு பாதிப்பு நேர்கிறது. பாதிக்கப்பட்ட மகளை வைத்துக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தியவர்களை சட்டரீதியாக தண்டிக்க யோகிபாபு எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை.
யோகிபாபு குணச்சித்திர நடிப்பில் நல்ல கவனம் ஈர்ப்பார். இப்படத்திலும் அதைச் செய்துள்ளார். ஆனாலும் இன்னும் சில காட்சிகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். சிறுமி ஸ்ரீமதி தன் வெகுளியான நடிப்பால் நம்மை கலங்கடித்துள்ளார். வசந்த்ரா தன் எதார்த்த நடிப்பால் கவர்கிறார். அருள் தாஸ் உள்ளிட்ட பிற நடிகர்கள் தங்கள் முத்திரையைச் சரியாகப் பதித்துள்ளனர்.
எளிமையான படத்திற்கு என்ன தேவையோ அந்த இசையை வழங்கியுள்ளார் இசை அமைப்பாளர். கடலூரின் நிலப்பரப்பையும் கடல்பரப்பையும் சரியாக காட்டி கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர்.
ரணம் மிகுந்த ஒரு பிரச்சனையைப் பேசியிருக்கும் இப்படத்தில் துளியும் பிரச்சார நெடி இல்லை என்பது பாசிட்டிவ் அம்சம். ஆனால் முன்பாதியில் படம் கொடுத்த அழுத்தம் பின்பாதியில் இல்லாமல் போனது சின்ன சறுக்கல். படம் முடியும் முன்பாகவே முடிந்துவிட்ட உணர்வு ஏற்பட்டு விடுகிறது. அந்த விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பொம்மை நாயகி நம்மை வணங்க வைத்திருப்பாள்.
3/5