சார்பட்டா பரம்பரை- விமர்சனம்
தமிழ்சினிமாவில் ஒரு அசூரப் பாய்ச்சல் சார்பட்டா பரம்பரை. மிக காத்திரமான திரைக்கதையில் தான் நடிகர்கள் கேரக்டர்களாக உருமாறி நிற்பார்கள். சார்பட்டா பரம்பரையில் அது நிகழ்ந்துள்ளது. ஹாட்ஸ் ஆப் ரஞ்சித்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிசா சட்டம் கொண்டு வந்த காலத்தில் கதை நடக்கிறது. வடசென்னையின் முக்கிய அடையாளமான பாக்ஸிங்கில் இரு பரம்பரைக்கு நடுவே நடக்கும் யுத்தத்தில் ஹீரோ எப்படி தன் பலத்தை காட்டி கெலிக்கிறான் (ஜெயிக்கிறான்) என்பதே படத்தின் கதை
இந்தப்படத்தில் நடித்துள்ள நடிகர்களை இனி அவர்கள் தாங்கி நடித்துள்ள கேரக்டர்களைச் சொல்லியே சிலகாலம் தமிழ்சினிமா அழைக்கும். அனைவரின் நடிப்பிலும் அத்தகைய ஒரிஜினாலிட்டியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு ரைட்டர் தமிழ்பிரபா& ரஞ்சித் இருவரின் திரைக்கதைக்கான உழைப்பும் அவ்வளவு வலுவை சேர்த்துள்ளது. கபிலன், ரங்கன், மாரியம்மா, பாக்கியம், வேம்புலி, ராமன், வெற்றி, டாடி, ரோஸு என படமெங்கும் இந்த மனிதர்களுக்குள் இருக்கும் நடிகர்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள்.
படம் நெடுக அப்படியொரு உணர்ச்சி ததும்பி நிற்கிறது. படத்தின் தரம் எந்த இடத்திலும் சிரம் புறம் நீட்டிரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். மேக்கிங்கில் அபார உழைப்பு தெரிகிறது.
உச்சிமுகர வைக்கும் அளவிற்கு கேமராமேன், எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர், குறிப்பாக ஆர்ட் டைரக்டர் என எல்லோரும் அசத்தியுள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணனுக்கு ரஞ்சித் படமென்றால் மட்டும் இசை தனிப்பிரவாகம் எடுத்து வரும் போல. க்ளைமாக்ஸ் பாக்ஸிங் பைட்டில் பின்னணி இசையை வெளுத்துக்கட்டியிருக்கிறார்.
வலிய வலிய எவ்வளவு திறமையைக் கொட்டினாலும் எளியவர்களை ஏற்றுக்கொள்ளும் மன சஞ்சலும் மனிதர்களிடையே உள்ளதை மிக அழகாக தொட்டிருக்கிறது படம். படத்தின் இறுதியில், *யாராலும் புறக்கணிக்க முடியாத வெற்றி* என்று ஒரு வசனம் வரும். அது படத்திற்கும் பொருந்தும்!
4/5