தயாரிப்பாளரை அப்பாவாக தத்தெடுத்த நிக்கி கல்ராணி!
டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “சார்லி சாப்ளின் 2”.
இந்த படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இம்மாதம் 25-ம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தைப் பற்றி நாயகி நிக்கி கல்ராணி பேசியதாவது, ”என்னோட முகம் எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் முகத்தில் கூடுதல் சிரிப்பு வந்து விடும்.
படப்பிடிப்புல ஒரு குடும்பம் மாதிரி தான் வேலை செஞ்சோம். பிரபு சார் இந்தப் படத்துல என்னோட அப்பாவா நடிச்சிருக்கார். அவர் போடுகிற சாப்பாடு அருமையாக இருக்கும்.
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் டி.சிவாவை அப்பா அப்பான்னு தான் கூப்பிடுவேன். நான் அவங்களை என்னோட அப்பாவாக தத்தெடுத்திருக்கிறேன். இந்தப் பட வாய்ப்பு அவர் மூலமாகத்தான் எனக்கு கிடைத்தது. நிறைய சுதந்திரம் கொடுத்து நடிக்க வைத்தார்கள்.
படத்தில் இடம்பெற்ற ”சின்ன மச்சான்” பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அதற்கு இசையமைப்பாளர் அம்ரீஷ் தான் காரணம். அவருக்கு நன்றி. பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு டான்ஸ் அவ்வளவாக வராது. நடிக்க ஆரம்பித்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆட கற்றுக் கொண்டேன்.” என்றார்.