அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தோற்றுப்போவாய்… : கமலை எச்சரித்த அண்ணன் சாருஹாசன்

Get real time updates directly on you device, subscribe now.

kamal1

Related Posts
1 of 51

வேட்டியையெல்லாம் போட்டுத் தாண்ட வேண்டாம், இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து விட்டார் நடிகர் கமல்ஹாசன். என்னோடு ரஜினியும் சேர்ந்து மக்கள் பணியாற்ற வரலாம் என்று அவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அவருடைய இந்தப் பேச்சு கமல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தாலும் ஆளும் அரசியல்கட்சியினர் கமலை கடுமையாக விமர்சிக்கின்றனர். மற்ற கட்சிகளிலோ சிலர் எதிர்க்கிறார்கள், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் சிலர் கமலை வரவேற்கிறார்கள்.

இப்படி சுற்றியிருப்பவர்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை விட அவருக்கு நெருக்கமானவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தானே முக்கியம்.

கமலின் அண்ணன் சாருஹாசன் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி பேசியிருக்கிறார்.

அப்போது அவர் கமல், ரஜினி இருவரின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியிருப்பதாவது :

‘‘அரசியலில் மாற்று சக்தியாக திடீரென்று யாரும் வர முடியாது. கமல்ஹாசன் ஊழலை எதிர்க்க அரசியலில் ஈடுபட போவதாக கூறியிருக்கிறார். ஊழலை உடனடியாக ஒழிக்க முடியாது. அரசியலுக்கு வரும் அனைவருமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனாலும் அவர்களும் அரசியலுக்கு வந்த பிறகு ஊழலில் சிக்கி விடுகிறார்கள்.

அரசு ஊழியர்களில் சிலர் லஞ்சம் வாங்குகிறார்கள். மக்கள் ஓட்டுபோட பணம் வாங்குகிறார்கள். மக்கள் சரியாக இருந்தால் தான் ஆட்சியும் சரியாக இருக்கும். தமிழ் மொழியை வைத்து தான் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. மக்களை மொழி மாயையிலேயே அந்த கட்சிகள் வைத்து இருக்கின்றன. வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை.

கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருக்கிறார். அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். திறமையானவர், உழைப்பாளி. ஆனால் மக்கள் அவரை ஏற்பார்களா? என்பது சந்தேகம். ரஜினிகாந்தை அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று கேட்கும் மக்கள் கமல்ஹாசனை பார்த்து அரசியலுக்கு ஏன் வருகிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

எனவே கமல்ஹாசனுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை. தமிழ் நாட்டில் சாதி அடிப்படையில் தான் அரசியல் இருக்கிறது. எனவே கமல்ஹாசனுக்கு அது சாதகமாக இல்லை. கமல்ஹாசன் வேறு ஏதேனும் ஒரு கட்சியில் இருந்து விட்டு வந்திருந்தால் மக்கள் ஏற்று இருப்பார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குமே அரசியலில் பெரிய வாய்ப்பு இல்லை. இருவருக்கும் 10 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். மீதி 90 சதவீதம் ஓட்டுகள் மற்ற அரசியல் கட்சிகளுக்குதான் விழும்.

மக்கள் சினிமாவை பார்த்து யாருக்கும் ஓட்டுபோடுவது இல்லை. ரஜினிகாந்த் மீது மக்களுக்கு கவர்ச்சி மயக்கம் உள்ளது. கமல்ஹாசனுக்கு அது இல்லை. நல்ல நடிகராக மட்டுமே அவரை பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.’’ இவ்வாறு கூறியிருக்கிறார் சாருஹாசன்.

கமலின் சொந்த அண்ணனே இவ்வாறு கருத்து சொல்லியிருப்பது தான் அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.