கமல் சாரைப் பார்த்து தான் நடிக்க வந்தேன் – விழா மேடையில் நெகிழ்ந்த விக்ரம்
‘தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் `கடாரம் கொண்டான்’.
ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் விக்ரம் பேசியதாவது,
“நான் ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல் சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன்.
அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் எனக்கு பதினாறு வயதிலே படத்தை ரீமேக் பண்ணி நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கண்டிப்பாக அவரைப் போல என்னால் நடிக்க முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப சுவாரஷ்யமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பாக நடிச்சிருக்கிறார். படத்தை பின்னணி இசையோடு பார்க்கும் போது சூப்பராக இருந்தது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் அருமையாக இசையமைத்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் இந்தப் படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என்றார்.