சூரிக்கு கிடைத்த கெட்டப்பெயர் ஸாரி… பட்டப்பெயர்!
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடிக் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரசிக்கப்பட்டதால் அந்தப் படத்திலிருந்து ‘பரோட்டா சூரி’ என்று பட்டப்பெயரோடு அழைக்கப்பட்டார் காமெடி நடிகர் சூரி.
அந்த சமயத்தில் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று சந்தானம் எடுத்த முடிவும் சூரிக்கு சாதகமாகி விட்டது.
இதனால் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் தலை காட்டத் தொடங்கினார். தொடர்ந்து டஜன் கணக்கில் படங்களில் பலவித கேரக்டர்களில் நடித்தாலும் பரோட்டா சூரி என்கிற பெயர் மட்டும் மாறவே இல்லை.
அப்படி பல படங்களில் நடித்தும் பெயர் மாறாத சூரியின் பட்டப்பெயர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தால் மாறியிருக்கிறது.
ஆமாம், அந்தப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடி கேரக்டரில் நடித்திருந்தார் சூரி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரசிக்கப்பட்ட அந்தக் காமெடி கேரக்டர். இதனால் பார்க்கிற இடங்களில் எல்லாம் ரசிகர்கள் சூரியை புஷ்பா புருஷன் என்றே அழைக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.
சமீபத்துல கூட நான் கோவிலுக்கு என்னோட மனைவியோட போனேன். அங்க இருந்த ஐயர் கூட என்னை உத்துப் பார்த்துட்டு என் மனைவி முன்னாடியே நீங்க புஷ்பா புருஷன் தானேன்னு கேட்டு கலாய்க்கிறார். ஒருபக்கம் அந்தக் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகியிருப்பது சந்தோஷமாக இருந்தாலும் மனைவியோடு போகிற இடங்களில் புஷ்பா புருஷன்னு அவங்க முன்னாடியே கூப்பிடுறது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்று வருத்தப்படுகிறார் சூரி.
கெட்டப் பெயரா இருந்தாலும் கெட்டிப் பெயர் தானே ஜமாய்ங்க..!