ஜெய்ப்பூருக்கு போகும் ‘தர்பார்’ படக்குழு!
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் ‘தர்பார்’.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தோடு அங்கு நடக்கும் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
அதைத் தொடர்ந்து படப்பிடிப்புக்காக ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட தர்பார் படக்குழு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகருக்கு செல்கிறது. அங்கு செப்டம்பர் வரை இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
சமீபத்தில் தர்பார் படத்தில் இடம்பெறும் ரஜினியின் புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் புகைப்படங்களை பயன்படுத்தி அழகாக வடிவமைத்து தருபவர்களில் சிறந்த போஸ்டர் டிசைன்கள் படத்தின் விளம்பர போஸ்டர்களாக பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸின் அந்த அறிவிப்பை ரசிகர்கள் உற்சாகமாக ஏற்றுக்கொண்டு விதவிதமான போஸ்டர்களை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடிப்பதால் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.