தர்மதுரை – விமர்சனம்
RATING : 4/5
விஜய் சேதுபதி படங்கள் என்றாலே விசேஷம் தான். எல்லாம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிற கதைகள் அப்படி.
அப்படி கேரக்டராகவே வாழ்ந்து விடும் விஜய் சேதுபதியும், வணிக சமரசத்துக்குள் போகாத இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமியும் இணைந்து தந்திருக்கும் வாழ்க்கையின் இன்னொரு லெவல் யதார்த்தம் தான் இந்த ‘தர்மதுரை’.
ராதிகாவின் நான்கு மகன்களில் ஒருவரான விஜய் சேதுபதி டாக்டர் தான். ஆனால் அந்தப் பொறுப்பே இல்லாமல் எப்போதுமே குடித்து விட்டு வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் கலாட்டா செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் அடாவடிகள் தாங்க முடியாத அண்ணனும் இரண்டு தம்பிகளுமே அவரை ‘போட்டுத் தள்ள’ முடிவு செய்கிறார்கள்.
அவர்களிடமிருந்து விஜய் சேதுபதியை தப்பிக்க வைக்கிறார் ராதிகா. வீட்டை விட்டுச் செல்லும் போது வீட்டில் இருக்கிற அண்ணனுடைய 8 லட்சம் ரூபாய் பணத்தோடு போய் விடுகிறார் விஜய் சேதுபதி. ஊரில் உள்ளவர்களிடம் சீட்டுப்பணம் பிரித்து சேர்த்த பணம் காணாமல் போவதால் ராதிகாவின் குடும்பமே அவமானப்பட்டு ஊரை காலி செய்கிறது.
விஜய் சேதுபதி எடுத்துச் சென்ற பணம் என்னவானது? ஒரு டாக்டரான விஜய் சேதுபதி குடிகாரர் ஆகிற அளவுக்கு அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதையே நெகிழ வைக்கிற ப்ளாஷ்பேக் காட்சிகளோடு பந்தி வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
கெத்தாக நடிப்பதில் கெட்டிக்காரரான விஜய் சேதுபதி இதில் குடித்து விட்டு வருகிற, போவோர்களிடமெல்லாம் லந்தைக் கொடுக்கிற காட்சிகளில் செம ரகளை ரகம். அதே சமயம் ஒரு மனிதநேயமுள்ள டாக்டராக யதார்த்த முகம் காட்டும் போதும், காதலை இழந்து அழுகிற போதும் மனுஷன் மனசில் உட்கார்ந்து விடுகிறார். எல்லாப் படத்திலேயும் இப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க விஜய் சேதுபதி!
தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் என கவர்ச்சிக்கு ஓ.கே சொல்லுகிற மூன்று நாயகிகள் கையில் கிடைத்தும் அவர்களை கிளாமல் டால் ஆக பயன்படுத்தாமல் கன்னியமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
விஜய்சேதுபதியின் அம்மாவாக வரும் ராதிகா கிராமத்து அம்மாக்களின் முகத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். மருத்துவ கல்லூரி புரொஃபஸராக வரும் ராஜேஷ், ஐஸ்வர்யாவின் அப்பாவக வரும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்சேதுபதியின் அண்ணனாக வரும் அருள் தாஸ், தம்பியாக வரும் சௌந்தரபாண்டி என படத்தில் வருகிற அத்தனை கதாபாத்திரங்களையும் எவ்வளவு தூரத்துக்கு இயல்பாக காட்ட முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு காட்டியிருக்கிறார்கள்.
காமெடிக்கு கஞ்சா கருப்பு இருக்கிறார். சரியான இயக்குநர்கள் கையில் சிக்கினால் கஞ்சாவில் காமெடி வாசனை வரும் என்பதற்கு இந்தப்படமும் ஒரு சாம்பிள்!
பருத்தி வீரனுக்குப் பிறகு கிராமத்துப் பின்னணி இசையில் இன்ஸ்ட்ரூமெண்ட்டுகளை பெண்டெடுத்திருக்கிறார் யுவன். பாடல்களில் ப்ரெஷ்னெஸ்!
சுகுமாரின் ஒளிப்பதிவில் கிராமத்துக்கே உரிய அழகை முழுமையாக திரையில் வார்த்திருக்கிறார்.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கிராமங்களுக்கு சென்று சேவையாற்ற வேண்டும் என்கிற கருத்தை ஆணி அடித்தாற்போல் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் திரைக்கதையாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
தர்ம துரை – ‘தங்க’ துரை !