படத் தயாரிப்புக்கு குட்பை! : வேதனையோடு விலகும் பிரபுசாலமன்!
வெளியில் இருந்து பார்ப்போருக்கு சினிமா உலகம் ஒரு கலர்புல் ஜிகினா உலகம். இங்கே இருப்பவர்கள் அத்தனை பேரும் கோடிகளில் கொழிப்பவர்கள் என்பது தான் ரசிகர்கள் மனதில் பதியப்பட்டு வரும் நியதி.
ஆனால் அருகில் வந்து பார்த்தால் தான் தெரியும். நலிவடைந்து வரும் விவசாயத்தை தாங்கிப் பிடிக்க சில ஆர்வலர்கள் தேவைப்படுவது போல, சினிமாவை தாங்கிப் பிடிக்க தயாரிப்பாளர்களும் தேவைப்படுகிறார்கள் என்று!
ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்து நாலு காசு பார்ப்பதெல்லாம் அரிதிலும் அரிது. புதிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல தேர்ந்த அனுபவமுள்ளவர்களைக் கூட சினிமா அசைத்துப் பார்த்து விடும்.
”இனி சொந்தப்படமே எடுக்கப்போவதில்லை” என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரபுசாலமன்.
”மைனா”, ”கும்கி” என தமிழ்சினிமாவில் முக்கிய பதிவுகளான இருக்கும் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் தயாரித்திருக்கும் படம் தான் ”ரூபாய்”. ”சாட்டை” என்ற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்தவரின் இரண்டாவது படமிது.
”கயல்” நாயகன் சந்திரன், ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் தான் தனது தயாரிப்பு முடிவை கைவிடுவதாக அறிவித்தார் பிரபுசாலமன்
ஏன் இந்த திடீர் முடிவு?
”நான் சாலோம் ஸ்டுடியோஸ்ல இருந்து வெளியில வந்து காட் பிக்சர்ஸ்னு தனியா புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சி தயாரிச்சது இந்த ”ரூபாய்” படம் தான்.
மீண்டும் அன்பழகனுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுக்கணும்னு தான் தயாரிச்சேன். ”சாட்டை” படத்தை ஒண்ணேகால் கோடி ரூபாய்க்கு சாட்டிலைட் ரைட்ஸ் கொடுத்தேன். ஆனா இன்னைக்கு சாட்டிலைட்ங்கிறது ஜீரோவாயிடுச்சு. எந்த ஒரு பிசினஸுக்கு சூழலே இல்லாத நிலையில படத்தை பார்த்துட்டு படம் ரொம்ப நல்லா இருக்கு. நாங்க தான் வாங்கி ரிலீஸ் பண்ணுவோம்னு சொல்லி எனக்கு கை கொடுத்தது காஸ்மோஸ் சிவா சார் தான்.
இந்தப்படம் டைரக்டர் அன்பழகனுக்காகத்தான் தயாரிச்சேன். இனிமே என்னோட காட் பிக்சர்ஸ் நிறுவனத்துல எந்தப் படத்தையும் தயாரிக்க மாட்டேன். ஏன்னா இன்னைக்கு சூழல் அப்படித்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.
தியேட்டர் கிடைக்கிறதுல சிக்கல் இருக்கு. அப்படியே தியேட்டர்கள் கெடைச்சாலும் இந்த மாதிரியான படங்கள் மவுத் பப்ளிசிட்டியில ரசிகர்கள் மத்தியில் பரவி பிக்கப் ஆகுறதுக்குள்ள தியேட்டரை விட்டு வெளியில போயிடுது. இப்படியெல்லாம் நெறைய பிரச்சனைகளுக்கு நடுவுல தான் இந்தப்படத்தை தயாரிச்சேன். சினிமாவுல இருக்கிற உண்மை நிலை என்னன்னு தெரியாமலேயே வெளியில பில்டப் பண்ணி பேசிட்டு போயிடுறாங்க. நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்” என்றார் வேதனையோடு பிரபு சாலமன்.
ஜிகினா உலகத்துக்குள் தான் எவ்வளவு சிக்கல்கள்!