ப்ளீஸ் அப்படியெல்லாம் விஷாலை திட்டாதீங்க! ; மிஸ்கின் கோபம்
எப்படி நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது இரண்டு அணிகளுக்குள் பெர்சனல் தாக்குதல் நடந்ததோ? அதே போல தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் நான்கு அணிகளுக்குள் தனிமனிதக் தாக்குதல்கள் அரங்கேறத் தொடங்கி விட்டது.
அதிலும் விஷால் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று உறுதியானதும் மற்ற அணிகளில் உள்ளவர்கள் அவருக்கு எதிராக கெட்ட கெட்ட வார்த்தைகளால் தெருவில் இறங்கி கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.
”விஷாலின் உடம்பெல்லாம் விஷம்” என்கிற வார்த்தையில் ஆரம்பித்து இங்கு எழுத முடியாத வார்த்தைகள் வரை வரிந்து கட்டிக் கொண்டு கும்மியெடுக்கிறார்கள்.
தனக்கு எதிரான இந்த விமர்சனங்களுக்கு விஷால் எந்த பதிலடியும் கொடுக்கவில்லை என்றாலும், அவர் அணியில் போட்டியிடும் இயக்குநர் மிஸ்கின் இந்த விஷயத்தில் ரொம்பவே வருத்தப்பட்டார்.
பரத், பிரேம்ஜி அமரன் நடிப்பில் தயாராகியிருக்கும் ’சிம்பா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஸ்கின் தன் ஆதங்கத்தை கொட்டினார் விழா மேடையில்!
”ஆறு மாத காலமாக விஷாலை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் இந்த சினிமாவுக்கு நல்லது மட்டுமே செய்யணும்னு நெனைக்கிறான். அதுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறான். ஒரு பொறுப்புள்ள மனிதாபிமானி. எப்போதும் போன் வந்துகொண்டே இருக்கிறது. எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்.
அப்படிப்பட்ட விஷாலை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இன்னொரு அணியினர் ”உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்”னு சொல்லி திட்றாங்க. அவன் மீது விஷம் இருக்கலாம். அது சிவனுக்கு இருக்கிற மாதிரி கழுத்துல கொஞ்சூண்டு விஷமா இருக்கலாம். ஆனால் அவன் என்னைக்கு நல்லது மட்டுமே செய்றான். கெட்டது செய்றதே கிடையாது.
அதனால தயவு செஞ்சு விஷாலை தனிப்பட்ட முறையில யாரும் திட்ட வேண்டாம், தயாரிப்பாளர் சங்கத்துல வெற்றி பெற்றதும் ஒரு வருஷத்துல சொன்னதைச் செய்வோம். எதுவும் செய்ய முடியலேன்னா நாங்களே ராஜினாமா செஞ்சிடுவோம் என்றார் மிஸ்கின் கோபத்தோடு!