ரஞ்சித்தை விமர்சிப்பவன் யோக்கியனில்லை : ‘கபாலி’ எதிர்ப்பாளர்களுக்கு ருத்ரன் பதிலடி!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் எக்கச்சக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அது படைப்பு ரீதியானது என்பதை விட இயக்குநர் ரஞ்சித்தின் பின்புலம் சார்ந்த சாதிய ரீதியிலான விமர்சனங்களைத் தான் அதிகம் சந்தித்து வருகிறது.
இதுகுறித்து ”உன்னை விமர்சிப்பவன் யோக்கியனில்லை” என்று இயக்குநர் ரஞ்சித்திடம் கூறுவது போல், மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
‘மகிழ்ச்சி’ ரஞ்சித்.
தெரிந்து கொள்ளாத எதைப்பற்றியும் பேசுவதில்லை என்பது என் சுயவிதி.
படம் பார்க்கவில்லை ஆகவே அது பற்றி எதுவும் எழுதுவதாயில்லை, ஆனாலும் உன் படம் பற்றியல்ல அதன் பாதிப்பு குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. பேசத்தயங்கும் ஒரு ஜாதி விஷயத்தைப் பற்றி கிட்டத்தட்ட அனைவரும் பேச வைத்ததற்காக மகிழ்ச்சி ரஞ்சித். ஜாதி மறுக்கும் அத்தனை பேருக்கும் தெரியும் ஜாதி ஒழியவில்லை என்று. சுய ஜாதி மறைத்தும் தன்மானம் பேசும் யாவருக்கும் தெரியும் ஜாதி உண்டென்று.
ரஞ்சித், உன் படம், மிகை மொக்கையென்றாலும், உன் நாயகன் அதிநுட்ப நடிப்பைக் காட்டியிருந்தாலும், கதைசொல்லும் நயம் குளறுபடியானாலும், ஒரு மிக மோசமான வியாபார விளம்பர ஆபாசம் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருந்தாலும்,மகிழ்ச்சி ரஞ்சித்.
இனி உன்னைக் கொஞ்சம் கூடத் தெரியாத ஒருவன், உன் வளர்ச்சியை அதன் வீச்சைக்கண்டு , உன்னை வசை பாடுவான். அவனை உதாசீனப்படுத்து ரஞ்சித். அவன் போன்றவர்களால் என் பல மாதங்கள் சில வருடங்களுக்குமுன் வீணாயின. உன்னை விமர்சிப்பவன் யோக்கியனில்லை, உன் படைப்பை படைப்பாக மட்டுமே விமர்சிப்பவனே உன் பதிலுக்கு அருகதையானவன்.
நம் ஜாதியை விடவும் நம் சாதனையே வாழ்க்கை என நாம் முன்னேறுவோம் என ஒரு தீர்மானத்துடன் பார்வையை தீர்க்கமாக்கினால், நமக்கு, மகிழ்ச்சி ரஞ்சித்” இவ்வாறு ருத்ரன் எழுதியிருக்கிறார்.