என் ஆளோட செருப்பக் காணோம் – விமர்சனம்
RATING – 2/5
நட்சத்திரங்கள் – தமிழ், ஆனந்தி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரேகா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்
இயக்கம் – ஜெகன் நாத்
வகை – நாடகம், ரொமான்ஸ், காமெடி
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’
கால அளவு – 2 மணி நேரம் 2 நிமிடங்கள்
நாயகியின் காணாமல் போன ஒரு ஜோடி செருப்பைக் கண்டுபிடித்து கொடுக்கும் நாயகன் தன் ஒரு தலைக் காதலில் ஜெயித்தாரா இல்லையா என்பதை சொல்லும் படமே இந்த ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.
சிரியா நாட்டில் வேலை செய்யும் நாயகி ஆனந்தியின் அப்பா ஜெயப்பிரகாஷை அங்குள்ள தீவிரவாதிகள் பணயக் கைதியாக கடத்தி வைத்துக் கொண்டு நாங்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டுமென்று அந்நாட்டு அரசை மிரட்டுகிறார்கள்.
வெளிநாட்டிலுள்ள அப்பா கடத்தப்பட்ட தகவல் தெரிய வரவும், அதிர்ச்சியடையும் ஆனந்தி அம்மா ரேகாவைக் கூட்டிக் கொண்டு அருகில் இருக்கும் பெண் சாமியாரான நாயகனின் அம்மாவிடம் அப்பா பாதுகாப்பாக வீடு திரும்புவாரா? என்று குறி கேட்கச் செல்கிறார். சாமியாரோ கடத்தல் சம்பவம் நடந்த குறிப்பிட்ட நேரத்தில் நடந்த விஷயங்களைப் பற்றிக் கேட்கிறார்.
ஆமாம், ”அந்த நேரத்தில் என்னுடைய செருப்பை தொலைத்து விட்டேன்” என்கிறார் ஆனந்தி.
யெஸ் அதுதான் பிரச்சனை. காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து விட்டால் உன் அப்பா கண்டிப்பாக இந்தியா திரும்பி விடுவார் என்கிறார்.
அடுத்த நாள் முதல் ஆனந்தி தன் காணாமல் போன செருப்பைத் தேடுகிறார். ஆனால் தன் காதலி செருப்புக்காக அலைந்து துன்பப்படுவதை பார்க்க முடியாத தமிழ் அவரைத் தேட வேண்டாம் என்று சொல்லி தடுத்து விட்டு, அவருக்காக அந்த செருப்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் தான் இறங்குகிறார்.
காணாமல் போன செருப்பு கிடைத்ததா? ஆனந்தியின் அப்பா தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்தாரா? தமிழின் ஒரு தலைக்காதல் நிறைவேறியதா? ஆகிய கேள்விகளுக்கு பதிலாக அமைவதே மீதிக்கதை.
”மெரினா”, ”பசங்க”, ”கோலிசோடா” படங்களில் நடித்த ‘பக்கோடா பாண்டி’ தான் இந்தப் படத்தில் தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து ஹீரோவாக புரமோஷன் பெற்றிருக்கிறார். நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றாலும் ஹீரோவுக்கான மெச்சூரிட்டி இன்னும் அவருக்கு வரவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஹீரோயின் ஆனந்தி கவர்ந்திழுக்கும் காந்தக் கண்களால் நம்மை அசரடிக்கிறார். நடிப்பிலோ நோகாமல் முகபாவங்களைக் காட்டி ஓப்பேற்றுகிறார். ஒரே ஒரு டூயட் அதில் கூட நாயகன் தமிழுடன் இணைந்து டான்ஸ் ஆட மனம் விரும்பவில்லை போல, ஆனந்தியை தனியாகவும், தமிழை தனியாகவும் ஆட வைத்து ஒட்டி வைத்திருக்கிறார் இயக்குனர். (இப்படி சேர்ந்து ஆடக்கூட விரும்பாத ஆனந்தியை தூக்கி விட்டு அவருக்குப் பதில் அவர் தோழியாக வரும் அபிராமியை நாயகியாக்கியிருக்கலாமே ஜெகன் சார்?)
படத்தில் இன்னொரு ஹீரோ போலவே படம் முழுக்க வருகிறார் யோகி பாபு. அவர் வருகிற காட்சிகளில் அதிகமில்லை என்றாலும் ஓரளவுக்கு சிரிக்க முடிகிறது.
சிங்கம் புலி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். அரசியல்வாதியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு காமெடி பீஸ் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
இஷான் தேவ் இசையில் ‘அபிமானியே…’ பாடல் மட்டும் கேட்கும் ரகம். ஆனந்தியின் அழகில் தானும் கிறங்கி ரசிகர்களையும் கிறங்க வைக்கிறது சுக செல்வனின் தெளிந்த நீரோடை போன்ற ஒளிப்பதிவு. குறிப்பாக மழைக்காலக் காட்சிகள் அழகான ரசனை.
ஒரு ஜோடி செருப்பைத் தேடி அலைவது மட்டுமே கதையின் பிரதான அம்சமென்பதால் அதைச்சுற்றி அமைக்கப்பட்ட திரைக்கதையில் எக்ஸ்ட்ரா சுவாரஷ்யங்களையும் சேர்த்திருந்தால் படத்தின் வித்தியாசமான டைட்டிலைப் போலவே படமும் வித்தியாசமான படமாக இருந்திருக்கும்.
காதல் படமாக இருந்தாலும் ரத்தம் , வன்முறை, கவர்ச்சி, ஆபாசம் என எந்த நெருடல் காட்சிகளும் இல்லாத படமாகக் கொடுத்ததற்காக மட்டும் பாராட்டலாம்.