எங்க அம்மா ராணி – விமர்சனம்
RATING : 3/5
”கபாலி”யில் ஆக்ஷன் அவதாரமெடுத்திருந்த தன்ஷிகா தன் இரட்டை மகள்களுக்காக அமைதியே உருவாக நடத்தியிருக்கும் பாசப்போராட்டம் தான் இந்த ”எங்க அம்மா ராணி.”
வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்யும் தன்ஷிகா கணவர் மற்றும் இரட்டை மகள்களுடன் மலேசியாவில் வசிக்கிறார்.
வேலை நிமித்தமாக கம்போடியா செல்லும் கணவர் காணாமல் போக, மகள்களை வைத்துக் கொண்டு தனியாக என்ன செய்வதென்று தவிக்கிறார்.
விசா காலமும் முடியப் போகிற தருவாயில், கணவர் திரும்பி வந்தால் மட்டுமே மகள்களுடன் தமிழ்நாட்டுக்குச் செல்ல முடியும் என்கிற நிலையில் அங்கிருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து விசாவை நீட்டித்துக் கொண்டு கணவர் வருகைக்காக காத்திருக்கிறார்.
அந்த அசாதரண சூழலில் தான் இரண்டு மகள்களில் ஒருவர் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாத விசித்திர நோய் ஒன்றால் தாக்கப்பட்டு திடீரென்று இறந்து விடுகிறார்.
அதோடு அதனுடன் ஒட்டிப் பிறந்த இன்னொரு மகளுக்கும் அந்த நோய் வந்திருக்கிறது என்று டாக்டர்கள் கொடுக்கும் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார் தன்ஷிகா.
இருந்தாலும் குளிச்சியான பகுதியில் வசித்தால் அவருக்கு பரவியிருக்கிற நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் யோசனை சொல்கிறார்கள். அதன்படி மலேசியாவில் இருக்கும் குளிர் பிரதேசமான கேமரன் மலைக்கு தன் மகளோடு செல்கிறார்.
போன இடத்தில் அந்த வீட்டில் ஏற்கனவே இறந்து போன ஒரு சிறுமியின் ஆவி தன்ஷிகாவின் மகள் மீது புகுந்து விடுகிறது. அது ஏன் புகுந்தது? அந்த ஆவியிடமிருந்தும், விசித்திரமான அந்த நோயிடமிருந்தும் தனது மகளை தன்ஷிகா காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
பிறந்த குழந்தைக்கு அம்மாவாக நடிக்கக் கூப்பிட்டாலே யோசிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், இரண்டு வளர்ந்த பெண் குழந்தைகளுக்கு தாயாக நடிக்கச் சம்மதித்த தன்ஷிகாவின் துணிச்சலை மெச்சியே ஆக வேண்டும்.
கதை முழுக்க முழுக்க தன்ஷிகாவை சுற்றியே வருவதால் படம் முழுவதிலும் அவருடைய ஆட்சி தான். மகள்கள் மீது அளவு கடந்த பாசத்தை காட்டுவதாகட்டும் தனது ஒரு குழந்தை இறந்து போனதைக் கேள்விப்பட்டு ஹாஸ்பிட்டலில் துடிதுடித்து அழும்போதாகட்டும் ஒரு சராசரி அம்மாவின் பாச உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். சோகமே உருவாக காட்சியளிக்கும் சில காட்சிகளில் மட்டும் மேக்கப்பை கொஞ்சம் குறைத்திருந்தால் யதார்த்தம் தூக்கலாக இருந்திருக்கும்.
இரட்டை மகள்களாக வரும் வர்ணிகா, வர்ஷா இருவருமே அந்த வயசுக்கேத்த முதிர்ச்சியோடு பேசுவது அழகோ அழகு. அதிலும் இடைவேளைக்குப் பிறகு ஆவி புகுந்தவுடன் வெளிப்படுகிற உடல் மொழிகளும், ”இப்பக்கூட நீங்க என்னை குழந்தையா பார்க்கல.., ஆவியாத்தான் பார்க்கிறீங்க…?” என்று கேள்வி கேட்கிற இடத்திலும் வர்ணிகாவின் நடிப்பு சோ கியூட்.
தன்ஷிகாவைத் தவிர படத்தில் நமோ நாராயணன், அனில் முரளி இருவர் மட்டுமே தெரிந்த முகங்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நமோ நாராயணன் கேரக்டர் சபலிஸ்ட்டாகக் காட்டப்பட்டாலும், ஒரு காட்சியில் அக்மார்க் தமிழ்நாட்டுத் தாய்மாமனாக மாறுகிற இடம் செம செம செம! டாக்டராக வரும் சங்கர் ஸ்ரீஹரியும் பண்பட்ட நடிப்பில் நம்மைக் கவர்கிறார்.
படத்துக்கு தேவையான மலேசியாவை மட்டுமே கேமராவில் சுட்டுக் கொண்டு வந்து கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஏ. குமரன், சந்தோஷ்குமார்.
இளையராஜாவின் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் நம்மை காட்சிகளோடு ஒன்றிப்போகச் செய்து விடுகின்றன. குறிப்பாக ”வா வா மகளே” பாடல் கேட்கிற போதெல்லாம் கண்கலங்க வைக்கும் மெல்லிசை!
இதுவும் வழக்கமான அம்மா செண்டிமெண்ட் படமாகத்தான் இருக்கும் என்கிற மனநிலையோடு செல்லும் ரசிகர்களுக்கு கிளைமாக்ஸில் அவர்கள் யூகிக்கவே முடியாத ட்விஸ்ட்டோடு, எத்தனை எத்தனை மாற்றங்கள் வந்தாலும், குழந்தைகள் மீது அம்மாக்கள் வைக்கிற பாசமும், அவர்களுக்காக செய்கிற தியாக குணமும் மட்டும் என்றைக்குமே மாறாதது என்கிற தாய்மையைப் போற்றும் படமாக தன் பாணியில் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ். பாணி.
எங்க அம்மா ராணி – மகா ராணி!