எறும்பு- விமர்சனம்
பாறை நெஞ்சையும் கரைய வைக்கும் எறும்பு
சார்லி தன் முதல் மனைவியை பறி கொடுத்தவர். அவர் இரண்டாம் மனைவியோடு வாழ்ந்து வருகிறார். மிகவும் வறுமையான சூழலில் வாழ்க்கை நகர, முதல் தாரத்துப் பிள்ளைகளை சார்லியின் இரண்டாம் மனைவி துன்புறுத்துகிறார். மேலும் இடி விழுந்தாற்போல முதல் தாரத்துப் பிள்ளைகள் ஒரு பொருளைத் தொலைத்து விடுகிறார்கள். சித்திக்கு இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவு தான் எனப்பயப்படும் பிள்ளைகள் தொலைத்தப் பொருளை மீட்டெடுக்க என்னென்ன செய்கிறார்கள் என்பதாக விரிகிறது படத்தின் திரைக்கதை
ஒரு வறுமை சூழ்ந்த மனிதனை நம் கண்முன் நிறுத்துகிறார் சார்லி. இரண்டாம் மனைவிக்குத் தெரியாமல் தன் முதல் மனைவியின் குழந்தைகளுக்கு அவர் புரோட்டா வாங்கிக்கொடுக்கும் காட்சியில் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக நிறுவுகிறார். சூசன் கண்களாலே மிரட்டுகிறார். அச்சு அசலாக நடிப்பை வெளிப்படுத்தி சூசன் அமர்க்களம் செய்துள்ளார். சார்லிக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துள்ள வட்டிக்காரர் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். ஜார்ஜ் மரியான் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. சார்லியின் பிள்ளைகளாக நடித்துள்ள அனைவரும் பாஸ் மார்க் வாங்குகிறார்கள்
படத்தின் உள்ளாழத்தை உள்வாங்கி இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவில் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் ஏரியா கண் முன் தெரிகிறது. எதார்த்தம் மீறாத ஷாட்கள் கவனிக்க வைக்கின்றன
பழக்கப்பட்ட கதையில் பரிச்சயமில்லாத விசயங்களை வைத்து திரைக்கதையில் அசத்தியுள்ளார் இயக்குநர் சுரேஷ். படத்தின் இறுதிக்காட்சியில் நம் மனதைக் கனக்க வைத்துவிடுகிறார். இவ்வளவு பெரிய எமோஷ்னல் விசயத்தில் கூட சின்னதாக திரில்லர் சேர்த்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் முன்பாதியில் சின்ன தேக்கம் தெரிவதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் இன்னும் சிற்சில மாற்றங்களை அமைத்திருக்கலாம். இவையெல்லாம் சின்னச் சின்ன திருத்தங்கள். But இவையெல்லாம் தாண்டி எறும்பு நம் மனதில் ஊர்கிறது
3.25/5
#Erumbu