ஒத்துழைப்பு இல்லை; எல்லா முயற்சிகளும் வீண் : ஃபெப்ஸி பிரச்சனையில் பல்டியடித்த விஷால்!

Get real time updates directly on you device, subscribe now.

vishal

சுயநலமிக்க சில தயாரிப்பாளர்களால் விஷால் எடுத்த ஆகப்பெரும் முயற்சி முழுமையான வெற்றியைப் பெறாமல் படு தோல்வியில் முடிந்திருக்கிறது.

ஃபெப்ஸி தொழிலாளர்களை மட்டுமே வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்கிற காலம் காலமாக நடந்து வந்த எதேச்சிக்காரப் போக்குக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக இனி அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தேவையில்லை என்கிற முடிவை எடுத்தது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

அவருடைய இந்த துணிச்சலான முடிவை எதிரணியில் இருந்த சில தயாரிப்பாளர்கள் கூட கைதட்டி வரவேற்றார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து ஃபெப்ஸி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மறுபடியும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.

பின்னர் சில வார இடைவெளிக்குப் பிறகு நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், ஃபெப்ஸிக்கு எதிரான தனது முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறிய விஷால் இனி ஃபெப்ஸி அமைப்பினருடன் சேர்ந்து தான் தயாரிப்பாளர் சங்கம் வேலை செய்யும் என்றார்.

அவருடைய இந்த திடீர் பல்டி சிறுமுதலீட்டுப் படத்தயாரிப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

Related Posts
1 of 69

நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதில் உறுதியாக இருந்து சாதிக்கும் விஷால் இந்த ஃபெப்ஸி விவகாரத்தில் மட்டும் சறுக்கியது ஏன்?

தயாரிப்பாளர் ஒருவரிடம் விசாரித்தபோது பல கவலையோடு சில தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்…

”விஷால் இப்படி இறங்கி வரக்காரணமே தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கிற சில சுயநலம் பிடித்த தயாரிப்பாளர்கள் தான். ”நம்ம படத்தோட ஷூட்டிங் நின்று விடக்கூடாதே” என்று பதறிய அவர்கள் இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மாறாக விஷாலுக்கு நெருக்கடியைத் தான் கொடுத்தார்கள்.

இருந்தாலும் பெரிய படங்களுக்கு நாமே ஆட்களை ஏற்பாடு செய்து படப்பிடிப்பு நடத்தக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து அதற்காக எல்லா தயாரிப்பாளர்களும் வேலை செய்தார்கள். அப்படியும் கூட சில சுயநலம் பிடித்த சிறுபடத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அந்த ஒத்துழைப்பு இல்லாததால் தான் எல்லாப் பிரச்சனைகளிலும் உறுதியாக நின்று ஜெயிக்கும் விஷாலால் இந்த விஷயத்தில் அதே போல ஜெயிக்க முடியவில்லை” என்றவர் விஷால் பற்றிய இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.

”விஷால் பதவி ஏற்றதில் இருந்து செயற்குழு உள்ளிட்ட பொறுப்பில் இருப்பவர்கள் யாரிடமும் எதற்கும் கருத்து கேட்பதில்லை, எல்லாமே அவரும், செயலாளர் இருவரும் மட்டுமே முடிவை எடுத்து அறிவிக்கிறார்கள். அதுவும் கூட தயாரிப்பாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அந்தக் கோபம் தான் தற்போது ஃபெப்ஸி விவகாரத்தில் எதிரொலித்திருக்கிறது.

இனி ஃபெப்ஸி அமைப்பினரின் அடாவடிகளுக்கு பஞ்சமே இருக்காது, அவர்கள் செய்யப்போகிற அட்டூழியங்களுக்கு அளவிறுக்காது. தரமான படங்கள் வருவது அடியோடு குறைந்து விடும். இதனால் பெரிய தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, வழக்கம் போல சிறுபடத் தயாரிப்பாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்படப் போகிறார்கள். மொத்தத்தில் ‘ஆம்பளை’ என்று சொல்லிக் கொண்டிருந்த விஷாலுக்கு சில தயாரிப்பாளர்களின் துணையோடு பெப்சி தொழிலாளர்கள் அத்தனை பேரும் சேர்ந்து சேலை கட்டி விட்டு அவர் ‘பொம்பளை’யாக்கி விட்டார்கள்” என்றார் வருத்தம் குறையாமல்…

‘ஒற்றுமையே உன் விலை என்ன?’ என்கிற கேள்வி திரைத்துறையினருக்கே எழுதப்பட்டது போலும்!