புகழ் – திரை விமர்சனம்
RATING : 3/5
‘வல்லினம்’ படத்துக்குப் பிறகு ஜெய் நடிப்பில் ரிலீசாகியிருக்கும் படம்.
தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இளைஞர்களை சிந்திக்க வைக்கும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தந்திருக்கிறார் இயக்குநர் மணிமாறன்.
‘மெட்ராஸ்’ படத்தில் ஒரு சுவரை வைத்து அரசியல் நடக்கும் இல்லையா? அப்படித்தான் இந்தப் படத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தை வைத்து அரசியல் நடக்கிறது.
ஊருக்கு மத்தியில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானம் தான் ஊருக்கே பெருமை. இன்றைக்கு பலர் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசாங்க வேலையில் இருக்க காரணமும், பலர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிப்பதற்கும் அந்த மைதானத்தில் விளையாடியது தான் காரணம்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக சரித்திரப் பின்னணியும், சாதனைகளையும் கொண்ட அந்த மைதானத்தை ஊர் சேர்மன் மாரிமுத்துவின் உதவியுடன் கைப்பற்ற நினைக்கிறார் அமைச்சர் ஒருவர்.
அதற்காக அதே ஊரில் ”பெரிய கை”யாக இருக்கும் ஹீரோ ஜெய்யின் உதவியுடன் அவரது நண்பரை தேர்தலில் நிற்க ஜெயிக்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்ள முயற்சிக்கிறார்.
இதையெல்லாம் அறிந்த பிறகு எப்படி அந்த அதிகார கும்பலிடமிருந்து மைதானத்தை ஜெய் கைப்பற்றினார் என்பதே கிளைமாக்ஸ்.
ஊரில் எது நடந்தாலும் அதில் துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் துடிப்பான இளஞனாக வருகிறார் ஜெய். சீனுக்கு சீன் யதார்த்தம் என்று சொல்லுக்கு அர்த்தம் காட்டுகிறது அவருடைய நடிப்பு.
நண்பர்களுடன் அந்த மைதானத்திலேயே சதா எந்த நேரமும் கிடப்பது, ஏதாவது பிரச்சனை என்றால் அதை துணிச்சலோடு தட்டிக் கேட்பது என ஊர் பக்கம் நாம் பார்த்த பல இளைஞர்களின் கேரக்டரை பிரதிபலித்திருக்கிறார்.
வாயாடி நாயாகியாக வருகிறார் சுரபி. அவரது அறிமுகக் காட்சியே கலகலப்பாக ஆரம்பமாகிறது. அண்ணன் வீட்டுக்கு வந்த இடத்தில் தன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நாயகன் ஜெய்யின் துணிச்சல் பிடித்துப் போய் மெல்ல மெல்ல அவரை காதலிக்கக் தொடங்குவதும், ஜெய் சுரபி இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் புதுமை! அதேசமயம் அநியாயத்துக்கு உடல் இளைத்து பல காட்சிகளில் பரிதாபமாக காட்சியளிப்பதை தவிர்த்திருக்கலாம் சுரபி.
ஜெய்யின் நண்பனாக வரும் ஆர்.ஜே.பாலாஜியை அடக்கித்தான் வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மணிமாறன். ”டேய் இவங்க தாண்டா நம்ம ஏரியா கலா மாஸ்டர்” என்று அவ்வப்போது அவர் கொளுத்திப்போடும் காமெடி வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகின்றன.
குடும்பம் என்று வந்து விட்ட பிறகு எதற்கு நமக்கு சண்டை சச்சரவு என்று ஒதுங்கிப் போக நினைக்கும் கருணாஸிடம் எதற்கெடுத்தாலும் ”வெட்டிடுவேன்” என்று மாரிமுத்து சொல்ல, அதை ஒரு கட்டத்தில் தாங்காமல் ”எங்க வெட்டிப்பாரு, ஆய் ஊய்ன்னா இப்படியே மிரட்டுற…” என்று பதிலடி கொடுப்பது சபாஷ்.
சேர்மனாக வரும் மாரிமுத்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். தான் நினைத்ததை அடைய அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் வளைந்து கொடுப்பார்கள். அதுவே பதவிக்கு வந்து விட்டால் அதை காப்பாற்றிக்கொள்ள எந்த லெவலுக்கு போவார்கள் என்பதை அவருடைய கேரக்டர் மிக அழகாக பிரதிபலிக்கிறது.
சில காட்சிகளில் வரும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவிலும் கை கொடுத்திருக்கிறார். ஊரை ஊராகவே அதன் இயல்பு மிகைப்படுத்தாமல் காட்டியிருக்கிறார். விவேக் – மெர்வின் இசை கூடுதல் பலம்.
இளைஞர்கள் கைகளில் அரசியல் சென்றாக வேண்டும். இல்லையென்றால் இந்த சந்ததிகள் மோசமான சூழலுக்கு ஆட்படுவதை தவிர்க்கவே முடியாது என்று சரியான நேரத்தில் சமூகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் இயக்குநர் மணிமாறன்.
புகழ் – விழிப்புணர்வு!