டைட்டில் ஒன்று, ஆனால் கதை வேறு – ‘கும்கி 2’ ரகசியம் உடைத்த பிரபு சாலமன்!

Get real time updates directly on you device, subscribe now.

2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு – லட்சுமிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான ‘கும்கி’ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொட வேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.

இப்படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னி கிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.

ஒளிப்பதிவு – சுகுமார், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.

படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

”கும்கி 2 பிரமாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் ‘கும்கி 2’.

குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த ‘கும்கி 2’ இருக்கும்.

வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்” என்றார்.

இப்படத்தை தயாரித்து வரும் பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா நிறுவனம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சிங்கம் 3’, ‘மெர்க்குரி’ மற்றும் தயாரிப்பில் இருக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மிகப்பிரமாண்டமாக கும்கி 2 படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.