சம்பளத்தை குறைச்சுக்கிறேன்… : நடிகர், நடிகைகளின் தூக்கத்தை கெடுத்த மதன் கார்க்கி!

அதிகப்படியான ஜி.எஸ்.டி வரியாலும், தமிழக அரசின் கூடுதல் வரியாலும் தமிழ்சினிமாவே கடும் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. அதன் விளைவாக திரையரங்க உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக தியேட்டர்களை இழுத்து மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் அரசு வரியை குறைக்க வேண்டும் என்கிற குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் முன்னணி நடிகர், நடிகர்கள் தாங்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை குறைக்க முன் வர வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் வாய் திறக்கவில்லை என்றாலும் தன்னுடைய சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி.
“பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதுவதற்காக நான் பெறும் சம்பளத்தில் இருந்து 15 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் மதன் கார்க்கி. அவரின் இந்த முடிவு அதிகப்படியான சம்பளம் வாங்கும் திரையுலகினரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.