ஜில் ஜங் ஜக் – விமர்சனம்
RATING : 3/5
சென்னை வெள்ளத்தில் காணாமல் போல பல ‘முன்னணி’ இதயங்களுக்கு மத்தியில் கெளரவம் பார்க்காமல் களத்தில் இறங்கி வேலை செய்து மக்கள் மனதில் நிறைவான இடத்தைப் பிடித்தவர் நடிகர் சித்தார்த்.
அவருடைய நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பில் வந்திருக்கும் படமென்பதால் கூடுதல் கவனம் ஏற்பட்டிருந்தது இயல்பான விஷயம்.
படத்தின் போஸ்டர்களும், டிசைன்களுமே ரசிகர்களை இந்தப்படத்துல என்னமோ புதுசா இருக்குன்னு ஆர்வத்தை தூண்டியவை தான்.
யு-ட்யூப்பில் வெளியான புரமோஷன் பாடல்களும், தங்களை தாங்களே கலாய்த்த புரமோஷன் வீடியோ கூட நல்ல வரவேற்பைப் பெற்றவை.
சரி படம் எப்படி?
பெயிண்டில் கொகைன் போதை மருந்தை மிக்ஸ் பண்ணி அடிக்கப்பட்ட ஒரு பிங்க் கலர் காரை ஹைதராபாத்தில் இருக்கும் சீன பார்ட்டியிடம் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்க்க வேண்டி வேலை வருகிறது சித்தார்த், சனந்த், அவினாஷ் மூவருக்கும்!
போகிற இடங்களில் அவர்களுக்கு பல தடங்கங்கள் வர, அதில் ஒரு இடத்தில் அவர்கள் கொண்டு போகிற கார் தீப்பிடித்து எரிந்து விடுகிறது.
தீயில் பெயிண்ட்டோடு கொகைனும் உருகி விட வேலையைக் கொடுத்த டான் அமரேந்திரமிருந்து எப்படி தப்பிப்பது? என்று யோசிக்கிறார்கள்.
அவன் எதிரியான ராதாரவியை கோர்த்து விட்டு தப்பிக்க நினைக்கிறார்கள்? தப்பித்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
ஒரே மாதிரியான ஃபார்முலா படங்களைப் பார்த்து பார்த்து புளித்துப் போன தமிழ்சினிமா ரசிகர்களுக்கு டெக்ஸ்டேர் (Texture) கலர் டோனில் வந்திருக்கும் இந்தப்படம் ஒரு வித்தியாசமான காமெடி அனுபவமாக இருக்கும். என்ன..? கிளைமாக்ஸ்ல பார்த்த காமெடி சீனை வீட்டுக்குப் போனதுக்கப்புறம் தான் நெனைச்சுப் பார்த்து சிரிப்பீங்க…! அந்தளவுக்கு லேட் பிக்கப் ஆகக்கூடிய காமெடிக் காட்சிகள் தான் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.
சின்னச் சின்ன உடல்மொழிகளிலும், மெட்ராஸ் பாஷை பேசும் சித்தார்த்தும் அவரது நண்பர்களுமான சனந்த், அவினாஷ் மூவருமே அசால்ட்டான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
படத்தில் நாயகி இல்லை. அதற்கான தேவையும் இல்லை என்றாலும், ஒரே ஒரே குத்தாட்டப் பாடலுக்கு படத்தில் நிறைய சந்தர்ப்பம் இருந்தும் இயக்குநர் அந்த ஏரியாவை ‘டச்’ பண்ணானது ஆச்சரியம் தான்!
காட்சிகளை ஞாபகப்படுத்தி சிரிக்கக் கூடிய காமெடிப்படம் என்றாலும் குரலை கேட்ட மாத்திரத்தில் சிரிப்பை வர வைக்கிறார் பை கேரக்டரில் வரும் பிபின். வாட்ஸ்-அப்பில் பிரபலமான ஹரஹரமகாதேவகி டோனில் அவர் பேசும் போதெல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தத்தில் அதிர்கிறது. அச்சு அசல் அதே சிணுங்கலும், கிரக்கமுமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
கண்டிப்பாக பெண்களுக்கான படம் இல்லை என்பதை நிச்சயமாகச் சொல்லலாம். அதேசமயம் பெண்கள் பார்க்ககூடாத படம் என்றும் சொல்லி விட முடியாது. புத்திசாலிப் பெண்கள் ரசித்துப் பார்ப்பார்கள்.
நரசிம்மனாக வரும் நாகா, ராவுத்தராக வரும் ராதாரவி, தெய்வநாயகமாக வரும் அமரேந்திரன், அட்டாக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்தீனா, மருந்து கேரக்டரில் நடித்திருக்கும் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சோனு ஸாவந்தாக நடித்திருக்கும் ஜாஸ்மின் பாஸின், சனந்த் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி என படம் முழுக்க ஆண்கள் கேரக்டர்கள் தான்.
”ஒரு பெரிய வேலையை சரியாக செய்ய ஒன்பது சின்ன சின்ன வேலைகளை செய்யணும்” மனதில் நிற்கிற ஒரே ஒரு வசனம் இதுதான்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் டெக்ஸ்டேர் கலர்டோன் வழக்கமான படங்களிலிருந்து இந்தப்படத்தை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது.
2020ல் நடக்கும் கதை என்பதால் தொழில்நுட்ப ரீதியான டைரக்டர் தீரஜ்வைத்தி அன்கோவின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. இருந்தாலும் ஏ சென்டர் தவிர்த்து பி அண்ட் சி சென்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது அவருக்கே வெளிச்சம்!
ஜில் ஜங் ஜக் – கொஞ்சம் கூல்; நிறைய ஹாட்!