மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மொட்டை ராஜேந்திரன் போகையில…
மீண்டும் புதுமுகங்கள் நடிக்க உருக உருக ஒரு காதல் படமாக தயாராகியிருக்கிறது ‘ஜிப்பா ஜிமிக்கி’.
3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கன்னடத் தயாரிப்பாளர் திவாகர் ஜி வி தயாரிக்கும் இப்படத்தில் அவரது மகன் கிரிஷ் திவாகர் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக மேற்கு வங்கத்திலிருந்து குஷ்பு பிரசாத்.
அவருடைய ஒரிஜினர் பெயரே குஷ்பு தானாம். அப்பாவின் பெயரை பின்பக்கம் சேர்த்து அறிமுகமாகிறார்.
படத்தை இயக்கும் அறிமுக இயக்குநரான ராஜசேகர் மாலைமுரசு பத்திரிகையில் பணியாற்றியவர் என்பதாலோ என்னவோ..? எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் மிக எளிமையாகப் பேசினார்.
“ இரண்டு நெருங்கிய நண்பர்கள் சம்பந்தியாக ஆசைப்பட்டு தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போக இரண்டு பேருமே ஒரு பயணத்தை மேற்கொண்டு தங்கள் அப்பா- அம்மா மனசை புண்படுத்தாதபடி பிரிவதற்கு ஒரு காரணத்தை கண்டுபிடிக்கக் கிளம்புகிறார்கள். அந்த பயணம் அவர்களை இணைத்ததா? இல்லை பிரித்ததா? என்பதே படமாம்.
தயாரிப்பாளர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முழுப்படத்தையும் அங்கே உள்ள கூர்க் பகுதியில் படமாக்கியிருக்கிறார்கள். அது மட்டும் காரணமில்லை. அந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முஸ்லீம்கள் மட்டுமே வசிப்பார்கள்.
இன்னொரு குறிப்பிட்ட இடத்தில் மலையாளிகள் மட்டுமே வசிக்கிறார்கள் எனக்கு அந்த அட்மாஸ்பியர் புதிதாக இருந்ததால் அங்கே படப்பிடிப்பை நடத்தினோம். என்ற இயக்குநரிடம் அதென்ன ஜிப்பா ஜிமிக்கி என்கிற கேள்வி எழாமல் இருக்குமா..?
கேட்பதற்கு முன் அவரே சொன்னார்….
ஜிப்பாங்கிற ஆண்களோட அடையாளம். ஜிமிக்கிங்கிறது பெண்கள் காதுல தொங்குற ஒரு லோலாக்கு. படத்துல ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரோட டிராவலைப் பத்திச் சொல்றதுனால இந்த டைட்டில் ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. அதனால தான் வெச்சேன். மத்தபடி பெரிய மறைக்கக்கூடிய காரணமெல்லாம் இல்லை என்றார்.
படத்தின் பாடல் காட்சி ஒன்றைப் பார்த்தபோது ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மாட்டுவண்டி ஓட்டிக் கொண்டு பாடிக்கொண்டே போனார்.
அவர் என்ன செய்கிறார்?
கன்னட ஆணுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் பிள்ளையாகப் பிறந்து கர்நாடகாவிலுள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்கிற ஒரு விவசாயி. அந்தக் கேரக்டரில் தான் கேரக்டரில் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்து இருக்கிறார்.
மாடு மிரளாம இருந்தாச் சரி!