கடைசி பெஞ்ச் கார்த்தி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 Kadaisi Bench Karthi

நட்சத்திரங்கள் : பரத் அங்கனா ராய், ரூஹானி மற்றும் பலர்

இயக்கம் : ரவி பார்கவன்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘A’

வகை : காமெடி, ரொமான்ஸ்

கால அளவு : 2 மணி 15 நிமிடங்கள்

காதலிக்கும் போது தொடாமல் விடுவதால் தானே பாதியிலேயே கழற்றி விடுகிறீர்கள். தொட வேண்டியதை தொட்டு விட்டால் எங்கள் காலைத்தானே சுற்றி வர வேண்டும் என்கிற ‘திருமணத்துக்கு முந்தையை முதலிரவு’க் கொள்கையோடு காதலை அணுகும் ஒரு இளைஞரின் கதை தான் இந்த கடைசி பெஞ்ச் கார்த்தி.

தன்னை உருக உருக காதலிக்கு ரூஹானியிடம் திருமணத்துக்கு முன்பே நாம் உறவு வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு சம்மதித்தால் தான் நான் உன் காதலை ஏற்றுக் கொள்வேன் என்கிறார் ஹீரோ பரத்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார் இரண்டு நாயகிகளில் ஒருவரான ருஹானி.

Related Posts
1 of 44

ரூஹானியை காதலிக்கும் முன்பே அங்கனா ராயை காதலிக்கும் பரத் ஏன் காதலில் இப்படி ஒரு முறை தவறிய அணுகுமுறையை காதலில் கையாள்கிறார் என்பதற்கு பரத் – அங்கனா ராய் காதல் காட்சிகளோடு இவர்கள் மூன்றுப்பேருக்கும் இடையிலான காதலில் ’என்ன’ நடந்தது? திருமணத்திற்கு முன்பாகவே ’உடலுறவு’ வைத்து கொள்ளும் இன்றைய மாடர்ன் லவ் ஏற்றுக் கொள்ளக் கூடியது தானா? என்பதுதான் ’கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தின் கதை.

இது கல்லூரிப் பின்னணியில் காமெடிப் படமா? அல்லது அடல்ட் காமெடிப் படமா? என்பதிலேயே திரைக்கதை அமைப்பதில் ரொம்பவே குழம்பியிருக்கிறார் இயக்குநர் ரவி பார்கவன்.

ஒரு கல்லூரிப் பின்னணிக் கதையில் மாணவ, மாணவிகளின் கலாட்டாக்களை காமெடியாகச் சொல்வதோடு, டபுள் மீனிங் வசனங்களை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

திருமணம் ஆன பரத்தை அவரது முதல் படமான பாய்ஸ் படத்தில் பார்த்தது போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் கல்லூரி மாணவராக பார்ப்பதே வித்தியாசமான ரசனை தான். அங்கனா ராய் உடனான பிளாஷ்பேக் காட்சிகளில் ‘அப்பாவி’யாகவும், ருஹானி உடனான காதல் காட்சிகளில் ‘அடப்பாவி’ என்று சொல்ல வைக்கும் மாடர்ன் மாணவராக நடிப்பில் அசத்துகிறார்.

கதாநாயகிகளில் ஒருவரான பஞ்சாப் அழகி ரூஹானி ஷர்மா கலர்ஃபுல் வரவு. இரண்டாவது கதாநாயகியாக, இன்றைய தலைமுறையை ஸ்கேன் எடுத்தது போல் பரப்பரக்க வைக்கிறார் அங்கனா ராய். லவ் குருவாக வரும் ரவிமரியா சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

ஏற்கனவே பார்த்து பார்த்து பழக்கப்பட்ட காதல் கதையைத் தான் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ரவி பார்கவன். வழக்கமான கல்லூரி கலாட்டா, மோதல், மோகம், காதல் அம்சங்களோடு இன்றைய தலைமுறையினரில் பலரிடம் இருக்கும், ‘கலவியும் கற்றும் மற’ கான்செப்ட்டை நாகரீகமாக சொல்ல முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் ரவி பார்கவனுக்கு ஒரு பூங்கொத்து.

படத்தில் குறிப்பிடும்படியான அம்சம் வசனங்கள். ‘வயித்துக்குப் பசி எடுத்தா ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறது இல்லயா.. அதே மாதிரி உடம்புக்குப் பசி எடுத்தா இன்னொருத்தர் உடம்பு மூலம் அத தீர்த்துக்குறது தப்பில்ல’’ ‘’பசங்க நாம தப்பு பண்ணாட்டியும், பொண்ணுங்க தப்பு பண்ணாலும் சட்டம் அவங்க பக்கம்தான் ஸ்ட்ராங். அதனால நம்மள ஸ்ட்ராங்கா வைச்சுக்க, கல்யாணத்துக்கு முன்னாடியே ’கன்ஃபர்ம்’ பண்றதுல தப்பே இல்ல.’’ ‘’பப்புக்கு போறதுக்கும், பார்ட்டி பண்றதுக்கும் இவங்களுக்கு லவ்வர்ங்குற பேர்ல நாம தேவை. அப்புறம் டிஷ்யூ பேப்பர் மாதிரி தொடைச்சிட்டு தூசி வீசிடுவாங்க’’ இப்படி படம் நெடுக இந்த தலைமுறையை போட்டோ ஸ்கேன் எடுத்த மாதிரியான இரட்டை அர்த்த வசனங்கள் கொஞ்சம் ஓவர் டோஸ் தான். இது அவசியம்தானா ரவி பார்கவன்?

ஒளிப்பதிவு கதையின் ஓட்டத்தில் பயணிக்கிறது. ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் முஜீர். அடுத்து இசையமைப்பாளராக அன்பு ராஜேஷ் அறிமுகமாகி இருக்கிறார். பாடல்கள் மெலோடி ரகம். ஃபேஸ்புக் லவ்வுல கிக் இல்ல பாடல் ட்ரெண்ட்டியான குத்துப்பாட்டு.

முதல்பாதி கல்லூரியில் நடக்கும் கலகலப்பான கலாட்டாக்களால் விறுவிறுவென நகர்கிறது.. இரண்டாம் பாதி சீரியஸான கதை, ப்ளாஷ்பேக் என நகர்கிறது. அப்படியே விட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் டபுள் மீனிங் வசனங்களில் இதுவும் ஒரு சராசரி ‘வணிக சினிமா’ தான் என்கிற அடையாளத்தை பெற்று விடுவது தான் வேடிக்கை.