களத்தூர் கிராமம் – விமர்சனம்

நட்சத்திரங்கள் : கிஷோர், யக்னா ஷெட்டி, மிதுன் குமார், சுலில் குமார் மற்றும் பலர்.
இயக்கம் : சரண் அத்வைதன்
சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U/A’
வகை : ஆக்ஷன், நாடகம்
கால அளவு : 2 மணி 22 நிமிடங்கள்
RATING : 2.5/5
ஆக்ஷன், வன்முறை, மசாலா என ஒரே மாதிரியான வரிசையில் வரும் படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது வெளியாகும் கிராமத்துப் பின்னணிப் படங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கும். அப்படி நாம் மறந்து போன கிராமத்து ஞாபகங்களை மீண்டும் கிளறி விட்டு கிராமத்து மனிதர்களின் வீரம், ரோசம், மானம், பழிக்குப் பழி, துரோகம் என எல்லாம் கலந்த கலவையாக நம்மை ரசிக்க வைக்கிற படம் தான் இந்த ‘களத்தூர் கிராமம்.’
தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் தான் களத்தூர் கிராமம்.
இந்த ஊரில் உள்ளவர்களுக்கு களவு செய்வது தான் தொழில். அதை ஒரு குலத்தொழில் போலவே செய்து வரும் அந்த கிராமத்து மக்களின் தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதே சமயம் நியாயம், தர்மத்துக்கு கட்டுப்பட்டவரும் கூட. அவரது உயிர் நண்பனான சுலில் குமார் சரியான சபலப் பேர் வழி.
அதனால் அவரது புத்தி அறிந்து அவருக்கு யாருமே உள்ளூரில் பெண் கொடுக்க முன் வராத சூழலில் கிஷோர் கொடுக்கும் வாக்குறுதியால் சுலிலுக்கு பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் முன் வருகிறது. ஆனால், பெண் பார்க்க வரும் போது கூடவே கிஷோரும் வந்தால் தான் பெண்ணைக் கட்டித்தருவேன் என்கிறார் பெண்ணின் தகப்பனார். அதன்படி ஒருநாள் பெண் பார்க்கச் செல்கிற வழியில் கிஷோர் இன்னொரு பிரச்சனைக்காகச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதன் விளைவாக பெண் பார்க்கும் இடத்துக்கு கிஷோரால் வர முடியாமல் போய் விடுகிறது. இதனால் பெண்ணின் தகப்பனார் சுலிலுக்கு பெண் கொடுக்க மறுக்க, அதனால் ஏற்படுகிற தகறாரில் அந்த சம்பந்தமே நின்று விடுகிறது.
இதனால் தனக்கு திருமணம் ஆகாததால் கிஷோர் மீது சுலில் ஆத்திரத்தில் இருக்க, வெறொரு பிரச்சனைக்காகச் சென்ற கிஷோரோ நாயகி யக்னாவை திருமணம் செய்து கொண்டு சுலில் முன் நிற்கிறார்.
அதைப் பார்த்ததும் கூடுதலாக ஆத்திரமடையும் அவர் ஒரு கொலை வழக்கில் கிஷோர் ஜெயிலுக்கு சென்றதும் அவரை பழி தீர்க்கும் விதமாக அவரது மனைவியான யக்னாவை தன் மனைவியாக்க முயற்சிக்கிறார்.
இந்தப் பிரச்சனையால் ஏற்படும் மோதலில் தன் உயிர் நண்பனான சுலிலை கிஷோரே கொலை செய்து விடுகிறார். அதற்கு பிராயச்சித்தமாக தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை சுலிலில் அம்மா- அப்பாவிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறார். அப்படி வளரும் மகனே கிஷோருக்கு வில்லனாக வந்து நிற்கிறார்.
அதுவரை தன் ஊருக்குள் போலீஸையே வர விடாமல் கட்டுக் காத்த அந்த கெளரவமும் நொறுங்க ஆரம்பிக்கிறது. இதையெல்லாம் கிஷோர் எப்படி சமாளித்தார்? பதிலடி கொடுத்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்கிற கொள்கையுடன் இருக்கும் நடிகர் கிஷோர் இதையும் அப்படி ஒரு பார்வையிலேயே பார்த்திருக்கிறார்.
முழுப்படமும் இரண்டு விதமான பிளாஷ்பேக் காட்சிகளால் நகர்கிறது. அதற்கேற்றபடி இரண்டு விதமான தோற்றங்களில் கருவத்திருக்கை என்கிற கேரக்டரில் கன கச்சிதம் காட்டியிருக்கிறார் கிஷோர்.
கிராமத்து கதைக்கேற்ற பொருத்தமான நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி. சொல்லப்போனால் அந்த களத்தூர் கிராமத்து பெண்ணாகவே மாறியிருக்கிறார். ஊரார் முன்னிலையில் வீரண்ணாவின் முகத்தை தோலுரித்துக் காட்டி கிஷோருடன் அவர் கிளம்பும் காட்சி கதைக்கு கூடுதல் பலம்.
வீரண்ணாவின் அப்பாவாக வரும் ராகுல் தாத்தா, அவரது மனைவியாக வரும் பாட்டி, கிஷோரின் மகனாக வரும் மிதுன்குமார் என படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் ஈர்க்கின்றன.
நீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல்துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் அவர் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித்துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன. தவிர, இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக வருபவர்கள் தென் மாவட்ட காக்கிகளின் உண்மை முகத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
எடிட்டர் சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு குழப்பமில்லாமல் படத்துடன் நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது. கருவேல மரங்கள் அடங்கிய ஒரு கிராமத்தை எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ? அதை விட அப்படிப்பட்ட இடங்களில் எப்படித்தான் கேமராவைக் கொண்டு சென்று படம் பிடித்தார்களோ என்று யோசிக்கும் போது அந்த கிராமும் அது சார்ந்த மலைப்பகுதியுமாக தனது தனித்தன்மையை கேமரா வழியாக காட்டி வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ்.
இதுபோன்ற கிராமத்து கதைகளுக்கு பின்னணி இசை ரொம்பவே முக்கியம். அதற்கு மிகச்சரியான ஆள் இசைஞானி இளையராஜா தான் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். மொத்தப் படத்திலும் பின்னிப் பிணைந்து தனது இசையால் படத்துக்கு உயிரூட்டியுள்ளார்.
திருடுவதையே குலத்தொழிலாகச் செய்யும் ஒரு சமூகத்தைப் பற்றிய கதையில் என்ன சமூகப்பொறுப்பு இருக்க முடியும்? என்பதை பார்க்காமல் இப்படிப்பட்ட சமூகமும் இந்த சமுதாயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை பதிவு செய்யும் விதமாக இப்படத்தைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் முதல் படத்திலேயே அழுத்தமான ஒரு உண்மை சம்பவத்தை கையிலெடுத்ததுடன் அதை கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் படமாக்கிய விதத்தில் கைதட்டல்களை அள்ளுகிறார் இயக்குநர் சரண் அத்வைதன்.