தினேஷ் – அதிதி மேனன் இணையும் ‘களவாணி மாப்பிள்ளை’

Get real time updates directly on you device, subscribe now.

‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ்புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப்பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் ”களவாணி மாப்பிள்ளை” படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் காந்தி மணிவாசகம்.

Related Posts
1 of 2

படம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகத்திடம் கேட்டோம்… ”2 மணி நேரம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப் பட்டிருக்கும் படமே களவாணி மாப்பிள்ளை. பெண்களின் மனோபாவமே இந்த படத்தின் மையக்கரு. பெண்கள் காய்கறி கடைக்குப் போனால் அரை கிலோ வெண்டைக்காய் வாங்க கால் கிலோ வெண்டையை உடைத்து உடைத்துப் பார்த்துத் தான் வாங்குவார்கள்.

அதே மாதிரி ஒரு புடவை வாங்க ஒரு கடையையே புரட்டிப் போட்டு விடுவார்கள். அவ்வளவு பார்த்து பார்த்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் அவர்கள் தடுமாறும் இடமும் தடம் மாறும் இடமும் திருமண விஷயத்தில் தான்… அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பது மட்டும் இன்று வரை சிதம்பர ரகசியமே.

அப்படித்தான் தான் ஏமாந்து போய் கல்யாணம் செய்து கொண்டது போல் தன் மகளுக்கு நடந்து விடக் கூடாது என்று நினைத்து ஏங்கும் ஒரு தாயின் போராட்டமும், தன் காதல் தான் முக்கியம் என்று நினைக்கும் மகளின் என்ன ஓட்டமும் தான் படத்தின் கதையோட்டம். இறுதியில் ஜெயித்தது தாயா மகளா என்பது தான் திரைக்கதை.

படத்தில் தினேஷின் கதாபாத்திரம் தான் கதையின் ஆணி வேர். தூள் கிளப்பி இருக்கிறார் தினேஷ். படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.