சினிமாவில் பெண்களின் பங்கு ரொம்ப கம்மியா இருக்கு : கமல்ஹாசன் வருத்தம்
சுஹாசினி இயக்கத்தில் ‘இந்திரா’வில் அறிமுகமான கமலின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் அனுஹாசன் அந்த ஒரு படத்தோடு திருமணம் செய்து கொண்டு லண்டனின் செட்டிலாகி விட்டார்.
இப்போது பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ‘வல்ல தேசம்’ என்கிற படத்தின் மூலமாக ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
நேற்று நடந்த இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது படங்களின் பட்ஜெட் குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை கூறினார்…
சினிமாவில் புதிய முயற்சிகளை செய்யும் போது முதலில் சினிமாவில் இருப்பவர்கள் வரவேற்க வேண்டும். பாராட்ட வேண்டும். பெண்களை மையப்படுத்தி படமெடுப்பதற்கு தைரியம் வேணும், அதை என்னோட வாத்தியார் ( கே.பாலச்சந்தர் ) தான் எடுத்துகிட்டிருந்தார். எல்லார் வீட்டிலேயும் பெண்கள் ராஜ்யம் தான் இருக்கிறது. அது என்னமோ தெரியல சினிமாவுல மட்டும் அது நடக்க விடாமலே பண்ணிக்கிட்டிருக்காங்க.
வழக்கமாக சினிமாவில் செய்யப்படும் பில்டப்புகள் எதையுமே இந்தப் படத்துல நான் செய்யலேண்ணும் படத்தோட இயக்குநர் நந்தா பேசும்போது சொன்னார்.
இனி வரும் காலகட்டங்களில் அதுதான் எல்லோரும் பாராட்டும், விரும்பும் ரசனையாக இருக்கும். 4000 பேரை வெச்சு எடுத்த சினிமாவையே 200 பேர் பார்த்தாப் போதுங்கிற நிலைமை இல்லாமல் ஒரு சின்ன குழு செய்ததை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பது தான் எங்களுக்கும் பெருமை. கலைக்கும் பெருமை. அந்த நிலை வந்து கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது. சிறு சிறு குழுவாக வேலை செய்யும் போது வேலைவாய்ப்புகள் அதிகமாகும் என்பதை நல்ல செய்தியாக சொல்லிக்கொள்கிறேன். இவரு எப்பவுமே கெட்ட செய்தியா சொல்வாருங்க. சுனாமி வரும்னு சொன்னார். வந்துருச்சுனு சொல்லிடக்கூடாது. சிறுபட்ஜெட் படங்கள் என்பது பணம் விரயமாகாமல் இருக்கும் என்பதற்கான ஒரு சிக்கன நடவடிக்கை மட்டுமல்ல. நல்ல கட்டுப்பாடு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் இருக்கும்.
நான் இந்த விழாவுக்கு வரக்காரணம் அனுஹாசன் மட்டுமல்ல, இந்தப் படத்தின் இயக்குநர் நந்தா இந்த விழாவுக்கு நான் வர வேண்டும் என்று விரும்பியதாக சொன்னார்கள்.
நல்ல இளம் கலைஞர்கள் என்மீது அன்பு வைத்திருப்பதை நான் ஒரு அட்வான்ஸ் புக்கிங்காக எடுத்துக் கொள்கிறேன். இளம் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்னைப் பார்த்து நல்ல கலைஞன் என்று சொல்வதும், சின்னப் பிள்ளைகள் என் படம் பிடிக்கும் என்று சொல்வதும் எனக்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் உண்மையாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அவர்கள் அன்புக்கு நன்றி இவ்வாறு கமல் பேசினார்.