இது என்ன மாயம் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ithu-enna-maayam

காதல்ங்கிறதே ஒரு மேஜிக் மாதிரி தான். எந்த நேரத்துல என்ன நடக்கும்னே சொல்ல முடியாது. சில எதிர்பாராத ஆச்சரியங்களும் நடக்கலாம்ங்கிறதைத்தான் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

மேடை நாடகங்களை நடத்தி வரும் ஹீரோ விக்ரம்பிரபுவும் அவரது நண்பர்களும் சபாக்களில் ‘ஈ’ ஆடுவதால் அதை விட்டு விட்டு வேறு தொழிலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கும் போது எதிரே தான் உருக உருக காதலிக்கும் பெண்ணின் காதலுக்காக ஒரு இளைஞன் படுகிற பாட்டை பார்க்கிறார் விக்ரம் பிரபு.

ஐடியா உதிக்கிறது. மேடையில் நடத்துகின்ற நாடகத்தை நிஜ வாழ்க்கையில் அரங்கேற்றினால் என்ன? என்பது தான் அந்த ஐடியா.

‘உன்னால் முடியும் தம்பி’ என்கிற பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து அதன்மூலம் உண்மையாக காதலிக்கும் இளைஞர்களை சம்பந்தப்பட்ட பெண்களிடம் சேர்த்து வைக்கும் தொழிலை ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு சில இளைஞர்களுக்கு செயற்கை நாடகம் நடத்தி அவர்கள் உண்மையாக காதலித்தப் பெண்களை சேர்த்து வைத்து சக்சஸ் செய்கிறார்கள். பிஸியாகிறார்கல். இவர்களது திறமையைக் கேள்விப்பட்டு நவ்தீப் என்கிற கோடீஸ்வரன் வருகிறார்.

பிரபல பின்னணிப் பாடகியான கீர்த்தி சுரேஷை தான் விரும்புவதாகவும் அவளை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும் கேட்கிறான்.

ஓ.கே சொல்லி வேலைகளை ஆரம்பிக்கும் விக்ரம்பிரபுவுக்கு கீர்த்தி சுரேஷ் யார் என்பதை நேரில் பார்த்தவுடன் ஷாக்!. அவர் கல்லூரி கால காதலி தான் கீர்த்தி சுரேஷ்.  அப்புறமென்ன?

விக்ரம்பிரபு – நவ்தீப் இருவரில் கீர்த்தி யாருக்கு கிடைத்தார் என்பதே கிளைமாக்ஸ்.

விக்ரம்பிரபுவின் உசரத்துக்கும், வாலிப வயசுக்கும் மிகவும் பொருத்தமான கேரக்டர் தான். கல்லூரியில் ஹாக்கி விளையாட்டில் பிரபலமான அவரை கிரிக்கெட் விளையாட்டில் இறக்கி விட்டு கோப்பையை வாங்குவதெல்லாம் செம சினிமா டச்சிங்.

ஒரு சில க்ளோசப் காட்சிகளில் மேக்கப்பில் கவனம் செலுத்தத் தவறியவர் காதல் காட்களில் கூட சோகமாக இருப்பது?

ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ் கன்னக்குழியழகில் நம்மை கிறங்கடிக்கிறார். மேக்கப் போட்டிருந்தால் இன்னும் அழகுக்கு அழகு சேர்த்திருப்பார்.

விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வரும் பாலாஜி, பாலாஜி வேணுகோபாலன், அஜய் மூன்று பேரும் டைமிங் காமெடியில் காட்சிகளை சீராக நகர்த்த உதவி செய்திருக்கிறார்கள்.

விக்ரம்பிரபுவின் அப்பாவாக வரும் நாசர், அம்மாவாக வரும் அம்பிகா இவருமே நல்ல செலக்‌ஷன். விக்ரம் பிரபுவை துரத்தி துரத்தி காதலிக்கும் காவியா விக்ரம்பிரபுவின் மனசுக்குள் யார் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பாமலேயே அவரை திருமணம் செய்ய நினைப்பது ஆச்சரியம்.

கோடீஸ்வரனாக வரும் நவ்தீப் கிளைமாக்ஸில் கேரக்டரில் மாறும் போது பரிதாபத்தை அள்ளுகிறார்.

இயக்குநர் விஜய்யின் படங்கள் என்றால் சின்னச் சின்ன ரோலில் வருகின்ற பெண்கள் கூட செம க்யூட்டாக இருப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட அழகு தேவதைகள் உண்டு.

ஜி.வியின் இசையில் எந்தப்பாடலுமே மனசை வருடாமல் போனது அதிர்ச்சி தான். என்னாச்சு ஜி.வி? ஹீரோ ஆனவுடனே ஸ்ருதி கொறைஞ்சிடுச்சோ..?

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் மனசுக்குப் பிடிச்ச ஒரு பெண்ணை உண்மையாக காதலித்திருப்போம். அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டிருப்போம். ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அது முடியாமல் போக, பல ஆண்டுகள் கழித்து அதே பெண்ணை நாம் நேரில் சந்திக்க நேர்ந்தால் அந்த நொடி வரக்கூடிய சந்தோஷம் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதைத்தான் கதையாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

உண்மையிலேயே நல்ல முயற்சி. ஆனால் அதற்கான திரைக்கதை மெனக்கிடல் என்பது படத்தின் எந்தக் காட்சியிலும் இல்லாதது கவலைக்கிடம்.

படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் தன்னுடைய உண்மையான காதலை நினைவுபடுத்தி ஃபீல் பண்ண வைத்திருக்க வேண்டிய படம். ஆனால் காதலின் உண்மையான உணர்வுகளை டீப்பாகச் சொல்லாமல் ஒரு நாடக வடிவிலேயே முழுப்படத்தையும் நகர்த்திக் கொண்டு போய் வெற்றி வாய்ப்புக்கான சதவீதத்தை தானே குறைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.