கர- விமர்சனம்
கர கரை சேர்ந்ததா? கறை படிந்ததா?
ஹீரோ தனுஷ் ஒரு பெருந்திருடன். ஆரம்பத்திலே அவரை அப்படி நமக்குள் பிக்ஸ் செய்துவிட்டார்கள். திருடனான தனுஷ் 16 வருடம் கழித்து தன் அப்பா கே.எஸ்.ரவிக்குமாரைச் சந்திக்கச்செல்கிறார். அதற்கு முன் அவர் வாழ்வில் சில சூறாவளி வீசியிருக்கும்! தன் அப்பாவை தனது சுயலாபத்திற்காக சந்திக்கச்செல்லும் தனுஷுக்கு அப்பா கே.எஸ் ரவிக்குமார் சில அதிர்ச்சிகளை கொடுக்கிறார். அதன்பின் தனுஷுக்கு சிலபல கடமைகள் சூழ்ந்துகொள்ள அவற்றை எப்படியெல்லாம் ராபின்ஹுட் ஹீரோவாக தனுஷ் சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை
சாந்தமான முகமும் குற்றவுணர்ச்சியுள்ள அகமும் கொண்ட தனுஷ் படத்தில் வழக்கம் போல் ஸ்கோர் செய்துள்ளார். பாவம் அழகான மிமிதாவிற்கு எக்கச்சக்க டல் மேக்கப்-ஐ போட்டு அநீதி செய்துள்ளனர். கே.எஸ் ரவிக்குமார் ஒரு நேர்மையான வெள்ளந்தி தந்தையை கண்முன் நிறுத்துகிறார். சுராஜ் வெஞ்சாரமுடு ஏற்றுக்கொண்ட தன் பாத்திரர்தைச் சரியாக் நிறைத்துள்ளார். ஜெயராம் அதகளம் செய்துள்ளார். கருணாஸ், பிரித்வி இருவரும் கவனிக்கும் படி நடித்துள்ளனர்
தேனீஸ்வரர் தனது ஒளிப்பதிவை திறம்பட கையாண்டுள்ளார். வித்தியாசமான ஷாட் கம்போசிங் ரசிக்க வைக்கின்றது. ஜிவி பிரகாஷ் தனுஷ் படம் என்றால் மட்டும் எக்ஸ்ட்ரா எபெக்ட் போடுவார் போல. பாடல்களை விட பின்னணி இசை கவனிக்க வைத்தது
பழங்காலத்து ராபின்ஹுட் கதை தான் என்றாலும் திரைக்கதையில் சில புதுமைகளைச் சேர்க்க முயற்சித்துள்ளனர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும், விக்னேஷ் ராஜாவும்! ஆனால் எந்தக்காட்சியுமே நமக்கு புதுமையாக இல்லை. மேலும் கரை சேர்க்கவே முடியாதளவில் படத்தில் லாஜிக் கேள்விகளும் எழுகிறது. குறைகளை மறக்க கமர்சியல் மீட்டரையாவது ஏற்றியிருக்க வேண்டும் அதையும் தவறவிட்டுள்ளனர். நல்ல படம் என்று சொல்ல முடியமால் நல்லா வந்திருக்க வேண்டிய படம் என்று சொல்ல வைத்து கரையேறுகிறது இந்தக் கர
2.75/5