வாத்தி- விமர்சனம்
தனுஷ் முதல்முறையாக தமிழ்/தெலுங்கு என இருமொழியில் நடித்துள்ள படம் என்பதால் வாத்தி மீது பலருக்கும் ஏக எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா வாத்தி?
1999 காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் மூலம் வணிக வலை விரித்து, கல்வியை வியாபாரமாக்கும் உத்தியை கையிலெடுக்கிறார் சமுத்திரக்கனி. ஒப்புக்குச் சப்பாக சில அரசு பள்ளிகளோடு தன் கல்வி அமைப்பைத் திணித்து அரசுப்பள்ளிகளை தரமிழக்கச் செய்ய வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்கு எதிராக ஒரு கிராமத்தில் ஆசிரியராக இருக்கும் தனுஷின் செயல்பாடு இருக்கிறது. இருவருக்கும் வரும் முட்டலில் வெற்றியைத் தொட்டது யார்? என்பதே கதை
குருவி தலையில் பனம்பழம் அல்ல..பனைமரம் என்றளவில் இக்கேரக்டர் தனுஷ்க்குப் பொருந்தாது நமது சோகம். அதைப்போலவே காதல் காட்சிகளில் ஹீரோயினும் ஏனோதானோவென இருக்கிறார். அவரது கேரக்டர் வடிவம் இப்படி அமைந்திருப்பது இன்னும் பெரும் சோகம். மாணவர்களை கஸ்டமர்ஸாகப் பார்க்கும் கல்வி வியாபாரி சமுத்திரக்கனி மட்டும் படத்தில் ஸ்ட்ராங்க் கேரக்டராக இருக்கிறார். போகப்போக அவரது கேரக்டருமே வீக்காகி விடுகிறது. மேலும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தவொரு கேரக்டரும் எழுதப்படவில்லை
படத்தின் பாடல்கள் போலவே பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கேமராமேன் இயக்குநரின் விஷுவல் எண்ணங்களை வண்ணங்களாக மாற்றியுள்ளார். 1999 காலகட்டம் கண்முன் தெரிவதில் இருக்கிறது கலை இயக்குநரின் செயற்பாடுகள். சிறிய சிறிய ஸ்டண்ட் என்றாலும் ஓகே ரகமாக இருப்பது ஆறுதல்
கதையை டிஸ்டர்ப் செய்யும் காட்சிகளும், என்கேஜிங் அம்சம் இல்லாத திரைக்கதையும் படத்தை டவுனாக்குகிறது. சமுத்திரக்கனி/தனுஷ் காம்போவில் நடக்கும் சம்பவங்கள் நமக்குள் கனெக்ட் ஆகாமல் போனது மற்றொரு சோகம். இவையெல்லாம் சொதப்பினாலும் படத்தின் மெயின் கதையில் இருக்கும் ஆழமும் அடர்த்தியுமே வாத்தியை கம்மிங் சொல்ல வைக்கிறது
3/5