நடிகைகளின் பின்னால் ஓடும் இளம் ஹீரோக்கள்! : டைரக்டர் கரு.பழனியப்பன் தாக்கு

Get real time updates directly on you device, subscribe now.

karu

எளிமையின் இன்னொரு வடிவம் தான் நடிகர் விஜய் சேதுபதி.

ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் அவரை அப்படித்தான் பார்க்கிறது. எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் எந்த விழாக்களில், யாரை சந்தித்தாலும் பந்தா, பகட்டு இத்யாதிகள் இல்லாமல் மிகவும் எளிமையாகவும், அன்பாகவும் தான் பழகுவார்.

தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்தும் சினிமாவுல இப்படி ஒரு எளிமையான ஹீரோவைப் பார்க்கிறது ஆச்சரியமா இருக்கு என்று அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும் சரி, எடுக்காத தயாரிப்பாளர்களும் சரி மேடை ஏறினால் விஜய் சேதுபதியை பாராட்டாமல் இறங்குவதில்லை.

அவ்வளவு ஏன் அவருக்கு அதிகம் பழக்கமில்லாத இயக்குநர் கரு.பழனியப்பன் கூட ‘சேதுபதி’ ஆடியோ பங்ஷனில் மனம் திறந்து பாராட்டினார்.

குறிப்பாக இந்தக் கால ஹீரோக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதையும் அவர் ஆதாரத்தோடு புட்டு புட்டு வைத்தார்.

இந்தப் படத்தோட டைரக்டர் அருண்குமாரையும், விஜய் சேதுபதியையும் பண்ணையாரும் பத்மினியும் படம் ரிலீசானப்போ சந்தித்தேன். அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சி இப்போதான் மீட் பண்றேன். அன்றைக்கு எப்படி பார்த்தேனோ அப்படித்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தோட டைரக்டர் அருண்குமாரோட வெற்றியில் எனது வெற்றியும் அடங்கியிருக்கிறது. இதேபோலத்தான் விஜய் சேதுபதி வெற்றியும்!

பொதுவா சினிமால எல்லாரையும் ஒப்பீட்டு பார்த்தே சாகடிப்பாங்க.. ‘அவன் படம் ஓடுச்சு. உன் படம் ஓடலையே..?’ ‘அவன் கார் வாங்கிட்டான். நீ வாங்கலையே..?’ ‘அவன் வீடு வாங்கிட்டான். நீ வாங்கலையே..?’ ‘அவன் கல்யாணம் பண்ணிட்டான்.. நீ பண்ணலையே..?’ ‘அவன் புள்ள பெத்துட்டான்.. நீ பெக்கலையே..?’ இப்படியே சொல்லிட்டுப் போய் ‘அவன் செத்துட்டான்.. நீ இன்னும் சாகலையே’ன்றதை தவிர மத்த எல்லா விஷயங்களையும் ஒப்பிட்டுப் பேசியே கொல்லுவாங்க..!

இதைப்பத்தி விஜய் சேதுபதிகிட்ட பேசினா ‘விடுங்க சார்.. இதெல்லாம் சகஜம்தான்.. இதைத் தாண்டித்தானே நாம போகணும்’னு சொன்னார்.

முன்பு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் இவங்கெல்லாம் தன்னை வைத்து ஹிட் கொடுத்த எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன் போன்ற இயக்குநர்களை கூப்பிட்டு திரும்ப திரும்ப படங்கள் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதே மாதிரி தான் விஜய் சேதுபதி தன்னோட முதல் படத்துல வேலை செஞ்ச இயக்குநர்களை திரும்பவும் ரெண்டாவது படத்துக்கு கூப்பிட்டு படம் பண்றார்.

ஆனா இப்போதுள்ள மற்ற ஹீரோக்கள் அப்படியில்லை. தன்னோட முதல் படத்துல சேர்ந்து நடிச்ச நடிகைகளைத் தான் ரெண்டாவது படத்துக்கு நடிக்க கூப்பிடுறாங்க.

இந்தப் படம் கண்டிப்பா ஜெயிக்கணும். ஏண்ணா… விஜய்சேதுபதி தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குநர்களுக்கு திரும்பவும் வாய்ப்புக் கொடுக்கணும்னு நினைக்கிறார். அவங்களை பக்கத்துலேயே வெச்சுக்கணும்னு விரும்புறார். அதுனாலதான் இந்தப்படம் ஜெயிக்கணும்னு நான் விரும்புகிறேன்.

மோகன்லால் பிரியதர்ஷன் போல.. சத்யராஜ் மணிவண்ணன்போல.. கவுண்டமணி ஆர்.சுந்தர்ராஜன் போல.. இந்த விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணியும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார் கரு பழனியப்பன்.