‘ஆக்கம்’ : வட சென்னையோட இன்னொரு பக்கத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!

Get real time updates directly on you device, subscribe now.

aakkam

பொதுவாகவே வட சென்னைப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். ஒவ்வொரு படமும் வட சென்னையின் ஏதாவதொரு அடையாளத்தை திரையில் காட்சிப்படுத்துவது தான் அதற்கு முக்கிய காரணம். 

வட சென்னையை கருவாகக் கொண்டு பல படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த லிஸ்ட்டில் விரைவில் ரிலீசாகப் போகும் படம் தான் ’ஆக்கம்’.

அறிமுக நாயகன் ராவண், அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்க இவர்களுடன் ‘பொன்விலங்கு’, ‘சபாஷ்’, ‘பாண்டவர் பூமி’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் ரஞ்சித், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஆதிலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வம், ராஜா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். வேலுதாஸ் ஞானசம்பந்தம் படத்தை இயக்கி அறிமுகமாகிறார்…

”வட சென்னையில நான் நேரில் பார்த்த ஒரு உண்மைச் சம்பவம் தான் என்னை இந்தப்படத்தை எடுக்க தூண்டியது. அதாவது ஒரு சாவு ஊர்வலத்துல ஒரு அம்மா ஆடிக்கிட்டி போறாங்க. அவங்க இடுப்புல பெரிய கத்தியை சொருகி வெச்சிருக்காங்க. அவங்க பின்னாடியே அவரோட மகனும் ஆடிக்கிட்டு போறான்.அந்த அம்மா – மகன் யாருன்னு விசாரிச்சப்போ நான் கேள்விப்பட்ட விஷயங்கள் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்துச்சு. இப்படிப்பட்ட அம்மாக்களோட கைப்பிடியில வளர்ற இளைஞர்களோட எதிர்காலம் எப்படியிருக்கும்?ங்கிறதைத்தான் இந்தப்படம் சொல்லுது. அதுக்காக படம் முழுக்க அட்வைஸ் இருக்காது. படத்தை பார்த்துட்டு வெளியில வர்றப்போ மனசு கனத்துப் போய் ரசிகர்கள் வெளியில வருவாங்க… அப்படி ஒரு கிளைமாக்ஸ் இந்தப்படத்துல இருக்கு.” என்றார்.

இப்படிப்பட்ட ஒரு அம்மாவோட வளர்றவர் தான் ஹீரோ ராவண், மீன் மார்க்கெட்ல மீன்களை சுத்தப்படுத்திக் கொடுத்து சம்பாதிக்கிற ஒரு பொண்ணா வருகிறாராம் ஹீரோயின் டெல்னா டேவிஸ்.

எந்த உயிராக இருந்தாலும் அதனுடைய ஆக்கம் நன்றாக இருந்தால் எதிர்கால வாழ்க்கையும் நன்றாகவே இருக்கும் என்கிற கருத்தை கமர்ஷியலோடு கலந்து கட்டி சொல்ல விரைவில் திரைக்கு வருகிறது இந்த ”ஆக்கம்.”