கத்துக்குட்டி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

KATHTHUKUTTI

RATING : 3.7/5

னுஷனுக்கு சோறு போடுற விவசாய நிலங்களை கூறு போட்டு விற்க அரசாங்கத்தின் துணையோடு களமிறங்கியிருக்கும் கார்ப்பரேட் காவாலிகளுக்கும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் சாட்டையடி கொடுக்கிற படமாக வந்திருக்கும் ‘கெத்துக்குட்டி’ தான் இந்த ‘கத்துக்குட்டி’.

தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் எது? என்கிற அரசாங்க வேலைக்கான தேர்வுக் கேள்விக்கு சரியாக பதிலாக வந்து விழுவது தான் ‘தஞ்சாவூர்.’

அப்படிப்பட்ட அந்த பொன் விளையும் பூமியான தஞ்சை மாவட்டத்தை மலடாக்க அரசாங்கம் கொண்டு வந்திருப்பது தான் ‘மீத்தேன் வாயு’ என்கிற கொடூரமான திட்டம். அந்த திட்டம் வந்தால் சோறு கொடுக்கிற அந்த பூமியின் நிலை என்னவாகும்? அதனால் வருகிற கேடுகள் என்னென்ன? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்தப்படத்தின் சிறப்பம்சம்.

என்னதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும் ‘விவசாயம் தான் வாழ்க்கை’ என்பதில் உறுதியாக இருப்பவர் ஹீரோ நரேன். இதனால் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் ஊருக்குள்ளே நண்பர் சூரியுடன் வெட்டியாக சுற்றித் திரிகிறார்.

அந்த நேரத்தில் அந்த ஊருக்குள் தேர்தல் வர பொறுப்பில்லாமல் திரியும் மகனுக்கு தேர்தலில் நிற்க சீட்டு வாங்கிக் கொடுக்கிறார் நேர்மையான அரசியல்வாதி அப்பா ஜெயராஜ்.

அவருக்கு போட்டியாக எதிர்க்கட்சியும் ஒரு படித்த இளைஞரை களமிறக்க, அதுவரை ஊருக்குள் வம்பு, சண்டை, சர்ச்சரவு என சுற்றிக்கொண்டிருந்த நரேன். தேர்தலில் சீரியஸாக ஜெயிக்க போராடுகிறார்? அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதை விவசாயிகளின் பட்டினிச்சாவு, மீத்தேன் திட்டத்தின் கோரமுகம் ஆகியவற்றை கலந்து ஒரு சீரியஸான மேட்டரை ஜாலியாக சொல்லி முடிக்கிறார் அறிமுக இயக்குநர் இரா.சரவணன்.

‘விகடன்’ குழுமத்தில் வேலை செய்தவர் என்பதால் ஒரு பத்திரிகையாளருடைய சமூகப் பொறுப்பை முழுப்படத்திலும் வெளிக்காட்டியிருப்பது சபாஷ்!

இடைவேளை வரை பொறுப்பில்லாமல் திரியும் நரேன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததும் சீரியஸாக மாறுவது கதையின் சீரியஸையும் சேர்த்தே காட்டுகிறது. ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்த பெருமை இந்தப்படம் கண்டிப்பாக நரேனுக்கு கொடுக்கும்.

Related Posts
1 of 5

ஊர்ந்து போகிற எறும்பைக் கூட சர்க்கரையைக் கொட்டி நகரச் செய்கிற சிருஷ்டி டாங்கேவின் ஆரம்ப அறிமுகமே அவர் எப்படிப்பட்ட கிராமத்துப் பெண் என்பதை அழகாக வெளிக்காட்டி விடுகிறார்.

நரேனின் அப்பாவாக வரும் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் ஆரம்பத்தில் மகனைப் பற்றி கவலைப்பட்டாலும் 40 வருஷ அரசியலில் அவருக்கு பதவியே கிடைக்காமல் போவது ரசிகர்களையும் வருத்தப்பட வைக்கிறது. கடைசியில் தேர்தலின் சீட்டு கிடைத்ததும் மகன் நல்வழிக்கு வருவதைப் பார்த்து சந்தோஷப்படும் அக்மார்க் கிராமத்து அப்பாவாக ஜமாய்க்கிறார்.

‘மீத்தேனி’ன் கோரமுகத்தை அதே போக்கில் சொன்னால் போரடித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார் இயக்குநர் சரவணன். அதனால் தான் காமெடிக்கு சூரிய களமிறக்கி விட்டு கதகளி ஆடியிருக்கிறார். வார்த்தை ஜாலங்களால் சூரி செய்யும் காமெடிகள் வயிற்றை புண்ணாக்குபவை.

சிருஷ்டி டாங்கேவின் அப்பாவாக விவசாயத்தை நேசிக்கும் ஒரு நல்ல மனிதராக வரும் ராஜா ஒரு விவசாயின் தற்கொலையை இந்த அரசாங்கம் எப்படியெல்லாம் கதை கட்டி இந்த சமூகத்தை நம்ப வைக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எதிர்க்கட்சி அரசியல்வாதியாக வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பக்கா அரசியல்வாதியாக வருகிறார். நரேனின் ஜாதகத்தை ஒரு சாமியாரிடம் தூக்கிக்கொண்டு போய் அவன் தேறவே மாட்டான் என்று சொல்லவும் நடுரோட்டில் காரை நிறுத்தி குத்தாட்டம் போடுவார் பாருங்கள். தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

ரியல் எஸ்டேட் விளம்பரத்துக்காக நடிக்க வரும் தேவி ப்ரியாவை கடத்திக் கொண்டு போய் காசுக்காக விவசாயிகளோட வாழ்க்கையில ஏன் விளையாடுறீங்கடி… என்று நரேன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி. அப்படிப்பட்ட நெத்தியடி வசனங்கள் படம் முழுக்க உண்டு.

செல்போன் டவரை வைத்தால் என்னென்ன பறவை இனங்கள் அழிந்து போகும் என்று பட்டியல் போட்டு அசரடிக்கிறார்கள்.

‘மீத்தேன்’ திட்டத்தின் கோர முகத்தை கமர்ஷியல் கலவையோடு பிசிறு தட்டாமல் பந்தி வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இரா.சரவணன்!

அதோடு இதுதான் ‘கமர்ஷியல்’ என்று ஒருபக்கமாகவே யோசிக்கிற இயக்குநர்களுக்கு எப்படி சமூகப் பிரச்சனைகளை கமர்ஷியலாக்கலாம்  என்பதையும் முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த ‘கத்துக்குட்டி’ ஒவ்வொரு கடைக்கோடி ரசிகனும் தூக்கிக் கொஞ்ச வேண்டிய ‘செல்லக்குட்டி’!