உடைந்தது தடை! : அக்டோபர் 9-ல் வருகிறது ‘கத்துக்குட்டி’
‘மீத்தேன்’ கொடூரத்தை மிக அழகாகக் காட்சிப்படுத்திருக்கும் படமான ‘கத்துக்குட்டி’ திரைப்படம் எல்லா தடைகளையும் தாண்டு நாளை மறுநாள் அக்டோபர் 9-ம் தேதி ரிலீசாகிறது.
நரேன் – சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் தயாரான கத்துக்குட்டி படத்தை அறிமுக இயக்குநர் இரா. சரவணன் இயக்கியிருக்கிறார்.
விவசாயிகளின் வேதனைகளையும், அவர்களின் வலிகளையும் மிகச் சிறப்பாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரவணன்.
அப்படிப்பட்ட நல்ல கருத்துக்களைக் கொண்ட இந்தப் படம் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் திரைக்கு வராமல் போனது.
தயாரிப்பாளர் ஒருவர் பண ரீதியாகத் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் ‘கத்துக்குட்டி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.ராம்குமார் நீதிமன்றத்தை அணுகி, நீதியரசர் ரவிச்சந்திர பாபு முன்னிலையில் 58 லட்ச ரூபாயை நீதிமன்றப் பதிவாளர் பெயரில் கட்டினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வரும் அக்டோபர் 9-ம் தேதி தமிழகம் முழுக்க ரிலீஸாகிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.
இதுகுறித்து இயக்குனர் இரா.சரவணன் கூறும்போது, “திட்டமிட்டபடி கடந்த 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . 9-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சில பிரச்சனைகள் குறிகிட்டதாலேயே இந்த தாமதம். காலங்கி நின்ற நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் அமீர், சசிகுமார் உள்ளிட்ட திரையுலகினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
‘புலி’ படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இருந்ததைவிட இப்போது இன்னும் அதிக தியேட்டர்களில் “கத்துக்குட்டி” ரிலீஸ் ஆக வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றார்.
கிராமியப் பதிவாகவும் காமெடி கொண்டாட்டமாகவும் திரைக்கு வரவிருக்கிறது ‘கத்துக்குட்டி’யை பார்த்த எல்லா பிரபலங்களும் படத்தை உயர்வாக பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.